TN Cabinet Reshuffle: ‘புத்தாண்டிற்கு பிறகு புதிய அமைச்சரவை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு?’ கலக்கத்தில் சிலர், கனவில் சிலர்..!
TN Cabinet Reshuffle: இந்த 8 மாதங்களில் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு அறிக்கை கொடுத்திருக்கும் தனிக்குழு ஒன்று, சரிவர செயல்படாத அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த பிறகு, கடந்த மே 7ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த 8 மாதத்தில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தாலும், புத்தாண்டிற்கு பிறகு புதுப்பொலிவுடன், புதிய அமைச்சரவையை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரியாக செயல்படாத அமைச்சர்கள் சிலர் மாற்றப்பட்டு அவர்களின் பொறுப்புகள் புதியவர்களுக்கு கொடுக்கப்படவிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று அன்பில் மகேஷில் தொடங்கி மூத்த அமைச்சரான நேரு வரை கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் அமைச்சர் போன்ற எந்த பொறுப்பையும் விரும்பவில்லை என்று சொன்னாலும், அமைச்சர்கள், தொண்டர்களின் அன்புக் கட்டளையை தட்டமுடியாத முதல்வர் ஸ்டாலின், வேறு வழியின்றி அவரை அமைச்சர் ஆக்குவார் என்றே கூறப்படுகிறது.
அதேபோல், ஏற்கனவே முக்கிய துறைகள் கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் ஐ.பெரியசாமி போன்ற மூத்த அமைச்சர்களும், கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்து, தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும் வெள்ளக்கோவில் சாமிநாதன் போன்றோருக்கும் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
இதுமட்டுமின்றி, சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் பதவி தரப்படாத மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சிலர், அமைச்சர் பொறுப்பை எதிர்பார்த்து காய்நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் துடிப்பாக செயல்படும் எம்.எல்.ஏக்களுக்கும் புதிய அமைச்சரவை இடம் கிடைக்க அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களை பிரதிதித்துவப்படுத்தும் வகையில், ஒருவருக்கு கூட தற்போதைய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. ’நானே திருவாரூர்காரன்தான்’ என முதல்வர் ஸ்டாலின் பேசினாலும், விவசாயத்தை பிராதனமாக கொண்ட இந்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆட்சி அமைந்த காலந்தொட்டே இருந்து வருகிறது. காரணம், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்ற இந்த டெல்டா மாவட்டங்கள் கொடுத்த வெற்றி.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளையும், திருவாரூரில் உள்ள 4 தொகுதிகளில் 3ஐயும், நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 2ஐயும் திமுக கூட்டணி கைப்பற்றியது. எனவே இந்த மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தரப்படவேண்டும் என்பது தார்மீக கடமையாக உள்ளது.
அதனடிப்படையில் பார்த்தால், மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் தரப்படவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அதன் குறியீடாகவே நேற்று தஞ்சையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் டி.ஆர்.பி.ராஜாவை பாராட்டி பேசியுள்ளார்.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் பிரகாஷ், பர்கூரில் மதியழகன் ஆகிய 2 திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவர்களில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி, திமுகவின் மூத்த உறுப்பினராகவும் தற்போது சபநாயகராகவும் இருக்கும் அப்பாவுக்கு, அமைச்சர் பதவி வழங்கிவிட்டு, சபாநாயகர் பொறுப்பை வேறு ஒரு மூத்த நிர்வாகிக்கு கொடுக்கலாம் என்றும் முதல்வர் நினைக்கிறார் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்த 8 மாதங்களில் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு அறிக்கை கொடுத்திருக்கும் தனிக்குழு ஒன்று, சரிவர செயல்படாத அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதனால், தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்று சில அமைச்சர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இருந்தாலும், புதியவர்களை அமைச்சரவையில் சேர்த்து, யாருக்கும் நெருடல் வராதபடி, புத்தாண்டில் அமைச்சரவையை விரிவாக்கம் மட்டும் செய்யலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் நமக்கு கிடைத்த தகவல்கள் சொல்கின்றன. விரைவில் அதற்கான அறிகுறி தெரியும் என எதிர்பார்க்கலாம்.