சட்டப்பேரவை நிகழ்வுகள்; நேரலையில் கட் செய்யப்படும் பேச்சுகள் - இதுதான் வெளிப்படைத் தன்மையா..?
சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர, மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் தொடர்பாக முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சர் க.அன்பழகன் பேசும்போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த 7.5% இடஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடிந்துள்ளது என்று கூறினார். உடனே இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, நம்முடைய முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆளுநர் அலுவலகத்தின் முன்பு நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு கையெழுத்தாகி வந்தது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலதாமதன் ஆன உடனேயே நான் முதலமைச்சராக இருக்கும்போது, நானே இதற்கு கையெழுத்து போட்டேன் என்று இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்” என்றார். முதலமைச்சரின் அதிகாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்று பழனிசாமி பேசுக்கொண்டிருக்கையில், அவரின் பேச்சு கட் செய்யப்பட்டது. அதன்பிறகு சபாநாயகர் ஏதோ கூறுகிறார் அதுவும் கட் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டாலும், எதிர்க்கட்சி உறுப்பினர் பேசும்போது, சில முக்கியமான பேச்சுகள் கட் செய்யப்படுவது, இதுதான் திமுக அரசின் வெளிப்படைத்தன்மையா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்