Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செங்கோட்டையனின் நடவடிக்கையில் அவருக்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக-வைத் தவிர மற்ற பெரிய கட்சிகள் அனைத்தும் உட்கட்சி விவகாரத்தில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக-வும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
செங்கோட்டையன்:
ஜெயலலிதா மறைவிற்கு பிறகே அதிமுக-வில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த சூழலில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவரும், எம்ஜிஆர் காலம் முதல் எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் எதிரொலியாக பதவியை பறித்த பிறகு, அவர்களுடன் ஒன்றாக தேவர் குருபூஜையில் பங்கேற்றதால் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் எடப்பாடி பழனிசாமியை துரோகி, ஏ1 குற்றவாளி என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.
பாஜக ஆதரவா?
இந்த விவகாரத்தில் செங்கோட்டையன் பாஜக-வை மலைபோல நம்பியிருந்தார். ஆனால், பாஜக செங்கோட்டையனுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைக்குப் பிறகு டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். மேலும், சில முக்கியமான பாஜக தலைவர்களையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் முடிவில் பாஜக-வின் முக்கிய தலைவர்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக செங்கோட்டையன் கருதியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டிலே இருந்து வந்துள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் குருபூஜையில் பங்கேற்றது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
கழட்டிவிட்ட பாஜக:
இதன்பிறகும், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சித் தலைமை மீதும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு மீதும் கேள்வி எழும் என அவர் கருதியுள்ளார். இதையடுத்து, செங்கோட்டையனுக்கு பாஜக தலைமை ஆதரவு தருகிறதா? என்று கூட்டணியில் உள்ள பாஜக-வினர் கருத்து கேட்டுள்ளனர். அவர்கள், செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்கள் சிலரைச் சந்தித்தாலும், அதிமுக-வின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
பாஜக செங்கோட்டையனுக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்திலும், அந்தியூர் தொகுதியிலும் செல்வாக்கு மிகுந்தவராக செங்கோட்டையன் இருந்தாலும் அவருக்கு சசிகலா, தினகரன் அளவிற்கு ஆதரவு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அடுத்தது என்ன?
தனது கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டாலும் தான் கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்கப்படமாட்டோம் என்பதை ஆழமாக நம்பியிருந்த செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும், பாஜக பக்கபலமாக என்று நம்பியிருந்த நிலையில் அவர்களும் கை விரித்துள்ளதால் தற்போது செங்கோட்டையன் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.





















