"சனாதனத்தை உதயநிதியால் ஒழிக்க முடியாது" - சி.பி.ராதாகிருஷ்ணன்
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "ஆன்மீகம் மட்டும்தான் தனி நபர் ஒழுக்கத்தை, பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைக்கோடியில் இருக்கும் மனிதருக்கும் உதவும் எண்ணத்தை வளர்க்கும். சேலம் மாநகரின் மகத்தான பாக்கியம் கோட்டை மாரியம்மனின் பலம்தான். காலத்தை கடந்து சேலத்தை வெற்றிகரமாக நகரமாக மாநகரமாக உயர்ந்து நிற்கிறது. எட்டுவழிச்சாலை திட்டம் மீண்டும் வரும் சேலம் நகரம் சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக என்று மாரியம்மனின் திருவடிகளை பணிந்து வேண்டுகிறேன். நல்லதே நடக்கும். சனாதனத்தை ஒழிப்பதற்கு உதயநிதிக்கு முன்பாக எத்தனையோ மகத்தான முகலாய மன்னர்கள் எல்லாம் முயன்றிருக்கிறார்கள். கூர்வாள் கொண்டு இந்துக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அதில் எல்லாம் ஒழியாத சனாதனத்தை உதயநிதியால் ஒழிக்க முடியாது. நிச்சயமாக இதை ஒரு கேலிக்கூத்தாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். ஆம் ஆத்மியை விட்டு வெளியே வர வேண்டும். நிதீஷ்குமாரை கைகழுவ வேண்டும். இவருக்கு என்ன அரசியல் ஞானம் இருந்து இதை சொன்னார் எனத் தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் என்ன கருத்து சொல்லி இருக்கிறது என்பதை கோடிட்டு பார்க்க வேண்டும். நான் ஒன்றைச் சொல்கிறேன். கவர்னருடைய முதல் கடமை அரசியல் சாசனத்தை காப்பது. அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும் கிடப்பில் போட வேண்டியதும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதும் அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்பதும் நிச்சயமாக ஒரு கவர்னரின் கடமையாகும். நான் சார்ந்திருக்கிற ஜார்கண்ட் மாநிலத்தில் கூட சில விஷயம் நடந்தது. நான் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உச்சநீதிமன்ற கருத்திற்கு மாறாக 77 சதவீதம் என்கிற இட ஒதுக்கீட்டை தருகிறபோது, இடஒதுக்கீட்டின் மீது அளப்பரிய பற்று இருந்தாலும் அதை அங்கீகாரம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதனால் கவர்னருடைய கடமை எது, அரசினுடைய கடமை எது முதலமைச்சர்தான் அரசை நடத்துகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற காரணத்தினாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை.
ஆளுநர் பதவி தேவையற்றது என திமுகவினர் அடிக்கடி சொல்கிறார்கள். 10 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக எத்தனை முறை ஆளுநர் பதவியை ஒழிக்க முயன்றது. இன்றைக்கு சொல்கிறார்களே இந்த அமைச்சர்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எப்படி அமைச்சர் பதவிக்கு தகுதியானார்கள் என எண்ணத் தோன்றுகிறது. ஆளுநருக்கு கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை என்கிறார்கள் நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை. அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை திமுக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் தலையிடாத அளவிற்கு சட்டங்களை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக ஆளுநர்கள் துணை நிற்போம். உங்களோடு இருப்போம். நீங்கள் கொலைகாரர்களை கட்டிப்பிடிக்கிறீர்கள். வெடிகுண்டு வீசுபவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என ஊர்வலம் போகிறார்கள். அதை வேடிக்கை பார்ப்பதாக ஒரு மாநில அரசாங்கம் இருக்கிறது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் கூட நிறைவேற்றுகிறார்கள். இதெல்லாம் அமைதியை வளர்க்கிற போக்கா . இதை தட்டிக் கேட்காமல் எதற்காக கவர்னர் பதவி” என தெரிவித்தார்.