விஜய்யை எம்ஜிஆராகப் பார்க்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்! தேர்தல் ஒரு சடங்கு மட்டுமே: பரபரப்பு விளக்கம்!
தேர்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமே; விஜய்யை எம்ஜிஆர் போலப் பார்க்கிறேன்" என செய்தியாளர் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

தேர்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமே; விஜய்யை எம்ஜிஆர் போலப் பார்க்கிறேன்" என செய்தியாளர் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
எம்ஜிஆர் அதிமுக.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் 'எம்ஜிஆர் அதிமுக' கட்சியின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ. ரஞ்சித் குமார், வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றும், அவருக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
2 லட்ச ரூபாய் நிதியுதவி
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்க விஜய்யால் மட்டுமே முடியும் எனக் குறிப்பிட்ட அவர், அவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், அந்த மாற்றத்திற்காகவே தாங்கள் விஜய்யை ஆதரிப்பதாகவும் மேடையில் முழங்கினார். மேலும், இக்கட்சியில் இணையும் தொண்டர்கள் வயது மூப்பு அல்லது உடல்நலக் குறைவால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தணிக்கைக் குழு மூலம் முடக்குவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்தை நாடியும் அத்திரைப்படம் வெளிவராமல் தடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மத்திய அரசைக் கணக்கு பார்க்கும் நேரம் வந்துவிட்டதைக் காட்டுகிறது என்றார். தங்களது கட்சி முற்போக்கு அரசியலை முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
விஜய்க்கு ஆதரவு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திரைப்பட விவகாரத்தில் தான் பேசியதை விஜய்க்கு ஆதரவான மற்றும் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாகவும், ஆனால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே என்றும், தற்போதைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினார்.
எனினும், விஜய்யின் கொள்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும், அவர் மக்களைச் சாதி, மதப் பாகுபாடின்றிச் சமமாகப் பாவிப்பதால் அவரை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். விஜய் தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால், தங்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும், எவ்வித பேரமும் இன்றி மக்கள் நலனுக்காகவே இந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார். மேலும், விஜய்யை தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவராகப் பார்ப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வாழ்நாளை வீணாக்க விரும்பவில்லை
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஏன் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும், அவருடன் இருந்தவரைத் தன்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறினார். அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோருடன் பழகியவன் என்ற முறையில், அவர்கள் கண்ட கனவை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாகவும், மீதமுள்ள வாழ்நாளை வீணாக்க விரும்பாமல் மக்கள் பணிக்காக இதனைத் தொடங்கிவிட்டதாகவும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.























