காவல்துறையை அனுமதிக்காத ஆர்எஸ்எஸ்.... என்ன நடக்கிறது கோவையில்...?
கோவையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல், ரகளையில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதனை எதிர்த்து பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் மனு அளித்தனர். அதில் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறியை தூண்டி, பிரிவினை ஏற்படுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தினர்.
அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் தர்மசாஸ்தா பள்ளியை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனிடையே காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளளது.
முன்னதாக கோவையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக்கோரி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பினர் புகார் அளித்திருந்த நிலையில் அந்த நிகழ்வை ரத்து செய்துள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.