"தொலைச்சிடுவேன் பாத்துக்கோ" மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர் அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாக மாஃபா பாண்டியராஜன் விமர்சித்திருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தன்னை விமர்சித்த மாஃபா பாண்டியராஜனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி அளித்துள்ளார். விருதுநகர் அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாக மாஃபா பாண்டியராஜன் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ராஜேந்திர பாலாஜி, கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன் என்றும் தொலைத்துவிடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை அரசியல் ஒத்து வராது:
தேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் மாஃபா பாண்டியராஜன். வேறு கட்சியில் இருந்து வந்தாலும் குறுகிய காலத்திலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றார். இதன் காரணமாக, 2016 சட்டமன்ற தேர்தலில் ஆவடியில் போட்டியிட வைத்தது மட்டும் இன்றி அமைச்சர் பதவியும் வழங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்தபோது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். கட்சி, எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்ததால் மாஃபா பாண்டியராஜன், தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
மீண்டும் அதிமுக ஒன்றானபோது, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலில் ஆவடியில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார். மீண்டும் அதிமுக பிளவை சந்தித்தபோது, இபிஎஸ் ஆதரவாளராக மாறினார்.
மாஃபா பாண்டியராஜன் vs ராஜேந்திர பாலாஜி:
இருப்பினும், முன்பு, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த காரணத்தால் கட்சிக்குள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, அவர் மீண்டும் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்தான், சென்னை அரசியலை விட்டுவிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் சென்றிருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். அங்கு, அதிமுகவின் முகமாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார் மாஃபா பாண்டியராஜன்.
குறுநில மன்னர் போல் செயல்படுவதாக ராஜேந்திர பாலாஜி மீது விமர்சனம் முன்வைத்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள ராஜேந்திர பாலாஜி, "கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது.
உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன். என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய்?" என்றார்.
இதையும் படிக்க: Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!