முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது நாகரீகமற்ற செயல் - அமைச்சர் நமச்சிவாயம்
என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்க மாட்டேன் என ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதம் எழுதி கொடுத்துள்ளார் - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியை பற்றியோ, என்னை பற்றியோ பேசினால் தோலை உறித்து விடுவேன் என நாராயணசாமி மிரட்டல் விடுக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். மேலும் தமிழிசை தனது அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கப்படுகின்றார். முதல்வரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை அதை தட்டிகேட்க திரானி இல்லை எனக் கூறினார்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் நாராயணசாமி அமைச்சர் லட்சுமி நாராயணன் தோலை உறிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார் என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் தோல் தான் உறிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்து விட்டு, சட்டமன்ற தேர்தலில் கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
அவர் தோலை மக்கள் தான் உறித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம். எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம். புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம்.
பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்