புதுச்சேரி அரசியல் பரபரப்பு: "இலாகா கிடைச்ச 2 நாளில் ராஜினாமா செய்வேன்" - பாஜக அமைச்சர் ஜான்குமார் அதிரடி!
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இலாகா ஒதுக்கப்படாத அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஜான்குமார், "இலாகா ஒதுக்கிய இரண்டு நாட்களில் பதவியை ராஜினாமா செய்வேன்" என பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இலாகா ஒதுக்கப்படாத அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஜான்குமார், "இலாகா ஒதுக்கிய இரண்டு நாட்களில் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று விரக்தியுடன் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலாகா ஒதுக்கிய இரண்டு நாட்களில் பதவியை ராஜினாமா செய்வேன்!
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில், புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு, 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், எல்.ஜே.கே (LJK) கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் நெருக்கம் காட்டுவதால், அவருக்கு இலாகா ஒதுக்காமல் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகிராமன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, பாஜக அமைச்சர் ஜான்குமாரும் அங்கு வந்து படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடனே முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜான்குமாரிடம், “வாருங்கள் இலாகா இல்லாத அமைச்சரே, நலமா? முதல்வர் ரங்கசாமி எப்போது உங்களுக்கு இலாகா ஒதுக்குவார்?” எனச் சிரித்தபடியே கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜான்குமார், “பதவிக்காலம் முடிவதற்குள் கொடுத்து விடுவார்கள்.. இலாகா ஒதுக்கிய இரண்டு நாளில் ராஜினாமா செய்து விடுவேன்” என விரக்தியுடன் பதிலளித்தார். “கடந்த தேர்தலில் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட மில்லைத் திறப்பார், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுப்பார் என்று சொன்னீர்களே? அது நடந்ததா?” என மீண்டும் நாராயணசாமி கேள்வி எழுப்பியதுடன், “நீங்கள் அப்போது பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை வரும் தேர்தலில் மக்களிடம் காட்டிப் பிரச்சாரம் செய்வோம்” என்றார்.
அதற்கு ஜான்குமார், “அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரங்கசாமி நிச்சயமாக மில்லைத் திறப்பார்” எனப் பதிலளித்தார். “இதைச் சொல்லும் நீங்கள், அடுத்த முறை பாஜகவில் இருப்பீர்களா?” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜான்குமாரைக் கலாய்த்தார்.
இதனால் ஜான்குமார் பதில் பேச முடியாமல், வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவரது தோளைத் தட்டி நாராயணசாமி வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. பாஜகவில் இருந்து ஜான் குமார் வெளியேற போகிறாரா என்கிற சந்தேகம் பாஜகவில் நிலவி வருகிறது.





















