திமுக ஆட்சி குறித்து ராமதாஸ் பாராட்டு: கூட்டணி உருவாகிறதா? - பொன்முடி கொடுத்த நச் பதில்!
"சென்சார் போர்டு என்பது ED, IT போன்ற ஒன்றிய அரசின் கைக்கூலி!" - விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கடும் விமர்சனம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட க.பொன்முடி, குத்துவிளக்கேற்றி முகாமினைத் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குளைப் பார்வையிட்ட அவர், தனது ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் கண் பரிசோதனைகளைச் செய்து கொண்டார். இம்முகாமில் மணக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அண்ராயநல்லூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்ற பொன்முடி, ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன் கூடிய 3,000 ரூபாய் பணத்தினைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிறைவாக, சித்திலிங்க மடம் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் உள்ளூர் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்;
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி குறித்த கேள்விக்கு; ஜனநாயகனுக்கு மட்டுமல்ல இன்றைக்கு வெளியாகி இருக்கும் பராசக்தி படத்திற்கு கூட ஏகப்பட்ட தடைகளை சொல்லி அவைகளையெல்லாம் நீங்கள் நீக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அன்று எழுதப்பட்ட அந்த வசனங்களுக்கே இன்று தடை சொல்லி இருக்கிறார்கள்.
இதனை எல்லாம் கணக்கில் கொண்டு தான் தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் நேற்று இந்த சென்சார் போர்டு என்பதும் இடி இன்கம் டேக்ஸ் அதனோடு சேர்ந்து சென்சார் போதும் சேர்ந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அந்த அடிப்படையில் பார்க்கிறபொழுது இது ஒன்றிய அரசு தமிழகத்திலேயே தமிழ் இன உணர்வை கட்டுப்படுத்துகின்ற வகையில் தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சென்சார் போர்டும் ஒன்றிய அரசின் கைக்கூலியாக மாறி இருக்கிறது என்பதை நேற்று நிரூபித்திருக்கிறார்கள் நான்காண்டு திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது என ராமதாஸ் கூறிய நிலையில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைப்பாரா என்கிற கேள்விக்கு; அது அவருடைய கருத்து, அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.





















