நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி
நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு முதல் காரணம் காங்கிரஸ் என்றும், இரண்டாவது காரணம் தி.மு.க என்றும் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, “ இந்தியாவில் வேறு எந்த நகரத்திற்கு இல்லாத அளவிற்கு சென்னையில் கூவம், கொசஸ்தலை மற்றும் அடையாறு என்ற மூன்று ஆறுகள் உள்ளது. ஆனால், மூன்று ஆறுகளையும் தி.மு.க., அ.தி.மு.க.வினர் நாசம் செய்துவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க.வை இன்னுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? கூவம், கொசஸ்தலை, அடையாறு ஆற்றில் வரும் தண்ணீரை குடிக்கும் நீராக மாற்றுவோம்.
நீட் விவகாரத்தில் முதல்வர் அ.தி.மு.க.வை குறை கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மு.க.ஸ்டாலினை குறை கூறுகிறார்கள். ஒரு மேடை ஒன்று போடுவோம். இருவரும் விவாதம் செய்யுங்கள். அதற்கு என்னையும் கூப்பிடுங்கள். நானும் விவாதத்திற்கு வருகிறேன். நீட் தேர்வு தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு பாதிப்பு. ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு.
நீட் தேர்வுக்கு காரணம் யார்? முதல் காரணம் காங்கிரஸ், இரண்டாவது காரணம் தி.மு.க., மூன்றாவது காரணம் பா.ஜ.க. நான்காவது காரணம் அ.தி.மு.க. இதற்கு பொது விவாதம் தேவையா? டாஸ்மாக் கடையை மூட இரண்டு கட்சிகளும் தயாரா? டாஸ்மாக் கடையை பற்றி பொதுவிவாதம் செய்ய தி.மு.க., அ.தி.மு.க. தயாரா?
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது நீட் போன்று தேர்வு நடத்த மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. 2009 பிப்ரவரியில் பதவி விலகினேன். அதுவரை அந்த தேர்வை நான் வரவிடவில்லை. நான் வெளியில் வந்த பிறகு 2010ல் ஆகஸ்டில் காங்கிரஸ் கொண்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்த சட்டத்தை கொண்டுவந்தபோது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த தி.மு.க.வின் காந்திச்செல்வன் உடனிருந்தார்.
2013ல் நீட் தேர்வு வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை காங்கிரஸ் தாக்கல் செய்தது. பா.ஜ.க.விற்கும் நீட் தேர்வு வேண்டும் என்பது கொள்கை. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது நமக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர்தான் தெரியவந்தது. அ.தி.மு.க.விற்கு தெரிந்திருக்கும். நீட் தேர்வால் எத்தனையோ பிஞ்சுக்குழந்தைகள் தறகொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை நிச்சயமாக தடை செய்ய வேண்டும்.
நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணம் தரமான கல்வியாக இருக்க வேண்டும், வணிகமயமாக்கப்பட கூடாது என்றனர். ஆனால், இன்று இந்த இரு காரணங்களும் தோல்வி அடைந்துள்ளது. நீட் கோச்சிங் சென்டர்களால் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்