2026 கூட்டணி ஆட்சிதான்.. விட்டதை பிடிக்கணும்.. அன்புமணி போடும் கணக்கு என்ன ?
வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை அன்புமணி கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலைப் பொருத்தவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை பலமான கட்சிகளாக இருந்து வருகின்றன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பாலான தேர்தல்களில், கூட்டணி வைத்தே, வெற்றி ஆட்சி அமைத்து வருகின்றன. கூட்டணி கணக்குகள் என்பது தமிழக அரசியலில், மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே, கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து விட்ட பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணி கட்சிகளுக்கு எப்போதுமே கொடுப்பது கிடையாது. கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது, திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பா.ம.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் திமுக இடம் கொடுக்கவில்லை. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட, தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சிகள் இதுவரை அமையவில்லை.
2026 சட்டமன்ற தேர்தல்
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளை சில கட்சிகள் இப்போதே முன்வைக்க தொடங்கியுள்ளன. புதிதாக துவக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் கூட, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்களிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய பா.ம.க வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு, என்ற முழக்கத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் கூட்டணி ஆட்சி அமையும் என கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - பாஜக கூட்டணி
பா.ஜ.கவும் மறைமுகமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றே பேசி வந்தது. இந்தநிலையில் தான் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைந்துள்ளது. அதன் பிறகும் கூட்டணி ஆட்சி என்று பாஜக தரப்பு பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இதற்கு உடனடியாக, எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து இருந்தார். கூட்டணி ஆட்சி என்பது அமையாது என அவர் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ம.கவின் திட்டம் என்ன ?
அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில், பாமக இடம்பெற வேண்டும் என்பதை இரண்டு கட்சிகளுமே விரும்புகின்றன. வடதமிழ்நாடு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால், வன்னியர்கள் மத்தியில் செல்வாக்காக உள்ள பா.ம.க அணியில் சேர்த்தால் மட்டுமே முடியும் என இரண்டு கட்சிகளும் கணக்கு போடுகின்றன.
இதுகுறித்து இப்போதே பாமக தரப்பில் இரண்டு கட்சிகளும், உடனடியாக கூட்டணியை உறுதி செய்து கொள்ளலாம் என வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக தலைமையோ, வன்னியர் சங்க மாநாடு முடியும் வரை கூட்டணி பற்றி பேச முடியாது என தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதற்குப் பின்னணியில் அன்புமணி ராமதாஸின் கணக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்புமணியின் திட்டம் என்ன ?
பாமக தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி, தொடர்ந்து பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என்பதையே வலியுறுத்தி வந்தார். இதைதான் அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியிடமும் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பா.ம.க வட்டாரங்களில் விசாரித்தபோது: வருகின்ற தேர்தல் என்பது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது அன்புமணியின் கணக்காக உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை பாமக தவற விட்டுள்ளது. இதேபோன்று 2019 ஆம் ஆண்டும் பாமகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, பா.ம.க பலமாக இருந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்திருந்தது.
அப்போது அதிமுகவுடன் பாமக இணைந்ததாலே, அதிமுகவின் ஆட்சி காப்பாற்றப்பட்டதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர். அப்போது போட்டியிட்டு பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தால், 2019ல் கூட ஆட்சியில் பங்கு பெற்றிருக்கலாம். எனவே இத்தனை வாய்ப்புகளை பா.ம.க நழுவ விட்டதால், 2026 தேர்தலில் நிச்சயம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

