சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?
சைதாப்பேட்டையில் பெரியார் சிலை மீது நாம் தமிழர் நிர்வாகி செருப்பால் தாக்கியதைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த பெண்கள் சீமான் புகைப்படத்தின் மீது செருப்பால் அடித்தனர்.

நாம் தமிழர் கட்சியினருக்கும், தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகள், பெரியார் அமைப்பினருக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. பெரியார் குறித்த சீமான் தெரிவித்த கருத்தே இந்த மோதலுக்கு முக்கிய காரணம் ஆகும்.
பெரியார் சிலைக்கு செருப்படி:
இந்த நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சைதாப்பேட்டையில் நேற்று பெரியார், அண்ணா உள்ளிட்டோர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நேற்று இரவு பொதுமக்கள் பலரும் அவர்களது சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இளைஞர் ஒருவர் வந்தார்.
அவர் பெரியார் சிலையை வணங்கியபோது சட்டென யாரும் எதிர்பாராத வகையில், பெரியார் சிலையை தனது செருப்பால் அடித்தார். இதனால், அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். பெரியார் சிலையை செருப்பால் அடித்த நபர் வீடியோ காலில் தனது நண்பர்களுக்கு காட்டியதாகவும், அவர் தன்னை ஒரு நாம் தமிழர் நிர்வாகி என்று கூறியதாகவும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சீமான் புகைப்படம் மீதும் செருப்படி:
பின்னர், அங்கிருந்த மக்கள் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர் தன்னை நாம் தமிழர் என்று கூறியதால், அங்கிருந்த தி.மு.க. கட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகைப்படத்தை தங்கள் செருப்பால் அடித்தனர். மேலும், சீமானுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சீமான் - திராவிட அமைப்புகள் மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். பெரியார் குறித்த சீமானின் தொடர் கருத்துக்களும், அவருக்கு கண்டனம் தெரிவித்து திராவிட மற்றும் பெரியார் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களும், தெரிவிக்கும் கண்டனங்களும் தொடர்ந்து பதற்றத்தை உண்டாக்கி வருகிறது.
தொடரும் மோதல்:
இந்த நிலையில், சென்னையில் மிகவும் பரபரப்பான சைதாப்பேட்டை பகுதியில் பெரியார் சிலை மீது செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்திற்கு பிறகு சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து பலரும் வெளியேறி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேறும் பலரும் தமிழக வெற்றிக் கழகத்திலும், திராவிட கட்சியிலும் இணைந்து வருகின்றனர்.
அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் சீமான் பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

