(Source: Poll of Polls)
Pen Monument: கடலில் இல்லையாமே.. கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க முதலமைச்சர் விருப்பம்?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாகடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து மத்திய அரசிடம் அனுமதியும் பெற்றிருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடற்கரைப் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கருணாநிதியின் நினைவிடத்திலேயே பேனா சின்னம் அமைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முதலமைச்சரின் விருப்பம் என கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பேனா நினைவுச் சின்னம்
சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில், ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதற்கு மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் 15 நிபந்தனைகள் உடன் இந்த அனுமதியை வழம்ங்கியது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் தந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியது.
நிபந்தனைகள் என்ன?
- கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ளஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்
- மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
- கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது
- பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்
- திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்
- அவசரகால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்
- ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது
- தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. உள்ளிட்ட நிபந்தனைகள் அனைத்தையுமே உரிய முறையில் பின்பற்ற வேண்டும், தவறினால் அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு
பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும், பூவுலகின் நண்பர்கள் போன்ற புவியியல் சார்ந்து இயங்கும் அமைப்புகளும் சமூகநல ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். அதேபோல், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதேபோல், சட்டமன்ற எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவும், பேனா சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் நாம் தமிழர் கட்சியும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவந்தனர்.