ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி தொடங்கிய, மத்திய அமைச்சர்கள் வரை பலர் பதில் அளித்தனர். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்: அரசியல் சாசனம், நீட் முறைகேடு, விவசாயிகள் போராட்டம், அக்னிவீர் திட்டம் உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பினார். "சிவனின் திரிசூலம், வன்முறையின் சின்னம் அல்ல.
அகிம்சையின் சின்னம். சிவபெருமான், பாபா குரு நானக் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் நாட்டை வடிவமைத்த நம்பிக்கைகள் ஆகும். இவை அகிம்சையை ஆதரிக்கின்றன. ஆனால், அச்சப்படக் கூடாது என போதிக்கிறது. ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே அல்ல" என்றார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "முழு இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகுந்த கவலை அளிக்கிறது" என்றார். இதற்கு எதிர்வினையாற்றிய ராகுல் காந்தி, "மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோர் மட்டுமே இந்துக்கள் அல்ல. அவர்களுக்கு எதிராக மட்டுமே நான் கருத்து கூறினேன்" என்றார்.
லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்: அக்னிவீர் திட்டம் பேசிய ராகுல் காந்தி, "ராணுவ வீரர்களிடையே அக்னிவீர் திட்டம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. அக்னிவீரர்கள் போரில் உயிர் இழந்தால் அவர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணமதிப்பு நீக்கம் போல, அக்னிவீர் திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டது" என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தத் திட்டம், 158 அமைப்புகளுடன் தொடர்புடையது. வேலைவாய்ப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. ராகுல் காந்தியின் கருத்துக்கள் தவறானவை. போரில் உயிரிழக்கும் அக்னிவீரர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "அரசாங்கம் அவர்களின் அவலநிலையை புரிந்து கொள்வதில்லை. அறியாமையில் உள்ளனர். அதுமட்டும் இன்றி, அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது" என்றார்.
இது தவறான தகவல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொடர்ந்து பதில் அளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. தவறான தகவல்களை சொல்ல வேண்டாம் என ராகுல் காந்தியை கேட்டு கொள்கிறேன்" என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தையே விவசாயிகள் கேட்கின்றனர்" என்று தெளிவுபடுத்தினார்.