Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars In 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Upcoming Cars In 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டில் பஞ்ச் தொடங்கி சஃபாரி வரையிலான புதிய எடிஷன்களை அறிமுகப்படுத்த உள்ளது.
டாடாவின் புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்த பல கார் மாடல்களும், ப்ராண்டிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டிலும் சில புதிய எடிஷன்கள், மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஹாரியர் மற்றும் சஃபாரியின் பெட்ரோல் எடிஷன்கள், பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் மற்றும் சியாரா மின்சார எடிஷன் என நான்கு எஸ்யுவிக்களை சந்தைப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. அந்த கார்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
1 &2. டாடா ஹாரியர் & சஃபாரி பெட்ரோல்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல் வகைகள் டிசம்பர் 9 , 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் வெளியீடு தற்போது தாமதமாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ப்ராண்டின் முதல் வெளியீடாக ஹாரியர் மற்றும் சஃபாரியின் பெட்ரோல் எடிஷன்கள் சந்தைப்படுத்தப்படலாம்.
டாடா இந்த மாடல்களில் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும். இது BS6 இரண்டாம் நிலை உமிழ்வு தரநிலைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் E20 எத்தனால் பெட்ரோல் கலவை எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 5,000rpm இல் 170PS ஆற்றலையும், 2,000rpm - 3,500rpm க்கு இடையில் 280Nm டார்க்கையும் வழங்குகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.
3. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
டாடாவின் அதிகம் விற்பனையாகும் பஞ்ச் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் மிகவும் பிரபலமானதாக திகழ்கிறது. இந்நிலையில் இதன் மிட்லைஃப் அப்டேடட் எடிஷன் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம். இதில் சிறிய ஒப்பனை மாற்றங்கள், வசதி மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் காணப்படலாம். சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எஸ்யுவியில் சற்று திருத்தப்பட்ட முன் கிரில் மற்றும் பம்பர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள் மற்றும் பஞ்சசின் மின்சார எடிஷனிலிருந்து கடன் வாங்கப்பட்ட சில டிசைன் அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
உட்புறத்தில் 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், ஆல்ட்ரோஸில் காணப்படுவதைப் போன்ற புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைப் பெறக்கூடும். 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஸ்டேண்டர்டாக 6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற அம்சங்களும் வழங்கப்படலாம். இன்ஜின் பஞ்சின் புதிய எடிஷனில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.
4. டாடா சியரா EV
இன்ஜின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா சியராவின் மின்சார எடிஷனும் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஹாரியர் EV-யைப் போன்ற பல-இணைப்பு பின்புற சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகின்றன. இது தற்போது 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் விருப்பங்களுடன் கிடைக்கும் ஹாரியர் EV-யிலிருந்து பவர்ட்ரெய்னையும் கடன் வாங்கக்கூடும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ வரை செல்லும் என்று ஹாரியர் EV உறுதியளிக்கும் அதே வேளையில், டாடா சியரா EV 500 கிமீக்கு மேல் ஓட்டும் வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாடல்களுக்கான வாய்ப்பு
இதுபோக ப்ராண்டின் ஹேட்ச்பேக் ஆன ஆல்ட்ரோஸ் மற்றும் முதன்மையான கார் மாடல்களின் ஒன்றான சஃபாரிக்கு மின்சார எடிஷன்களும் அடுத்த ஆண்டிற்கான பட்டியலில் உள்ளதாம். கர்வ் கார் மாடலின் சிஎன்ஜி ஆப்ஷனும் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஊடக தகவல்களின்படி, முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆக சப்-4 மீட்டர் பிரிவில் ப்ளாக்பேர்ட் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம். டாடாவின் ப்ரீமியம் லாங்க் ரேஞ்ச் எஸ்யுவி ஆன அவின்யாவின் கான்செப்ட் உற்பத்தியை நோக்கி நகரக்கூடும்.



















