OPS: ”பாஜக கூட்டணியில் விலகிட்டோம்னு சொன்னோமா?” - ஓபிஎஸ் பளீர் பேட்டி..
பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, தேதி அறிவித்த பின்பு, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எங்களின் அணுகுமுறை அமையும்.
Also Read: PM Modi Speech: திமுகவை இனி பார்க்க முடியாது... பிரதமர் மோடி ஆவேசம் - நெல்லையில் பேசியது என்ன?
”கூட்டணியில் இல்லை என்று எப்பொழுதாவது கூறியிருக்கிறாரா?”
அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூட்டணியில் இல்லை என்று எப்பொழுதாவது கூறியிருக்கிறாரா? எங்களுடைய நிலைப்பாடு தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி பொறுத்த வரை இந்தியா முழுவதும் முக்கிய தேர்தல், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், அதில் தலையிடுவது அரசியல் நாகரிகம் இல்லை. டிடிவி தினகரனுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
பாஜக சார்பில் எங்களுக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை தேர்தலே இன்னும் அறிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு தான் சொல்வார்களே தவிர பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது சொல்லமாட்டோம் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
”தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, பாஜக கூட்டணியில் விலகிட்டோம்னு சொன்னோமா” என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள நிலையில், பிரதமருடனான கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை, அழைப்பு விடுக்கப்படவில்லையா என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் உள்ளவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பது போன்ற மழுப்பலான பதிலை கூறினார்.
அதிமுகவிலிருந்து நீண்ட தொலைவுக்கு சென்றுவிட்ட ஓபிஎஸ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பாஜக கூட்டணியில் இருந்தால் , எத்தனை சீட்டுகளில் போட்டியிடுவார், எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது வரும் காலத்திலே தெரியும். வரும் காலங்களில் ஓபிஎஸ் அணியினரின் செயல்பாடுகள், அவர்களின் பலம் எவ்வளவு உள்ளது என வரும் காலத்திலே தெரியும் .