Assam: இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் ரத்து: பாஜக கூட்டணியில் விரிசல்..!கொதித்தெழுந்த நிதிஷ் குமார் கட்சி.!
Assam Assembly Namaz: இஸ்லாமியர்களின் தொழுகை நேர இடைவேளையானது ரத்து செய்யப்பட்டமைக்கு பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நாட்களின் போது, தொழுகைக்காக 3 மணி நேர இடைவேளையானது ரத்து செய்யப்பட்டதற்கு கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஜே.டி.யு கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அசாம் சட்டப்பேரவை:
அசாம் மாநில சட்டப்பேரவையில், இஸ்லாமியர்களின் தொழுகைக்காக 3 மணி நேரம் இடைவேளை விடுக்கும் வழக்கமானது , 1937 ஆம் ஆண்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடைவேளை நேரத்தை பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு தற்போது ரத்து செய்துள்ளது.
படம்: அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா
நேரமின்மை:
இதுகுறித்து அசாம் சட்டப்பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் திம்ரி தெரிவித்ததாவது, “ ஆங்கிலேயர் காலத்தில் இந்த பழக்கம் இருந்தது. அதனால், சட்டசபை வழக்கமான நேரத்தைவிட 11.30 மணிக்கே ஒத்திவைக்கப்பட்டது. இதுபோன்ற விதியால் வெள்ளிக்கிழமை நேரமின்மையால் விவாதம் நடைபெறாத சூழ்நிலை இருந்தது. மேலும், பிற மதத்தினரும் பிரார்த்தனைக்கு நேரம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், இதுபோன்ற விதியானது, பிற சட்டப்பேரவைகளிலோ , நாடாளுமன்றத்திலோ இல்லை.
இந்த நிலையில்தான், இதை முடிவுக்கு கொண்டுவர சட்டப்பேரவையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு :
இதற்கு , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஜே.டி. யூ கட்சியானது எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தொழுகை நேர இடைவேளை ரத்து குறித்து ஜே.டி.யூ கட்சியைச் சேர்ந்த நீரஜ்குமார் தெரிவித்ததவாது “ அசாம் மாநில அரசின் இந்த முடிவானது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, இந்தியர்கள் அனைவருக்கும் , அவர்களது மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க உரிமை இருக்கிறது.
அசாம் காமாக்யா கோயிலில், ஒவ்வொரு நாளும் யாகங்கள் மற்றும் பலி பூஜைகளை தடுத்த நிறுத்த முதலமைச்சர் சர்மாவால் முடியுமா?, அசாமில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறுமையை ஒழிக்க குரல் எழுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நீரஜ் குமார் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
சிக்கலில் பாஜக?
இந்நிலையில், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சியமைக்க துணையாக அமைந்ததில் ஜே.டி.யு கட்சியின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் பாஜக மாநில அரசின் செயல்பாடுகளில் ஜே.டி.யு கட்சியின் தலையீடானது பாஜகவை சற்று அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.