தொண்டை புண்ணிற்கு இபிஎஸ் எடுக்கும் மருந்து
தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தொண்டை புண்ணுக்கு பயன்படுத்தும் மருத்துவம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 13 இடங்களில் பேசும் வகையில் முதல்வரின் நாள் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசி வருவதால் முதல்வரின் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாரத்தின் போது கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்.
இருப்பினும் பிரசார நாட்கள் குறைவாக இருப்பதால் அதை கடந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். தொண்டை புண் அவதிக்கு நடுவே எப்படி பிரசாரம் செய்கிறீர்கள்? என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி தனது மருத்துவ ரகசியத்தை பகிர்ந்துள்ளார். தனக்கு தொண்டை பிரச்னை வரும் போது ‛சுடு தண்ணீர்’ குடிப்பதாகவும். அதை பருகும் போது, தொண்டை பிரச்னை அந்த நேரம் சரியாவதாகவும், அது தான் தான் செய்து வரும் மருத்துவம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பகிர்ந்து கொண்டுள்ளார்.