நான் துரோகியா?.. ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்து போயிருப்பேன்.. மல்லை சத்யா மன வேதனை
மதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்திருக்கும் நிலையில், மல்லை சத்யா மன வேதனையுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது மகன் துரை வைகோவின் அரசியலுக்காக 32 ஆண்டுகளாக உண்மையாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகி என்கிற பழியை வைகோ சசுமத்தியிருப்பதாக மல்லை சத்யா கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக, அதிமுக போன்றே தற்போது மதிமுகவிலும் உட்கட்சிப் பிரச்னைகள் பேசுபொருளாகியுள்ளது. இதில், வைகோ தன்னை துரோகி எனக் கூறியதற்கு மல்லை சத்யா மனம் வெதும்பி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மல்லை சத்யா மீது வைகோ குற்றச்சாட்டு
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வைகோ முன்பு இருவரும் சமாதானம் அடைந்தனர். இதனிடையே, அண்மையில் நடந்த மதிமுக செயற்குழு கூட்டத்தில் வைகோ மல்லை சய்தா மீது வைகோ சரமாரியாக குற்றம்சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, மல்லை சத்யாவை என் உடன் பிறவா தம்பி போல் நினைத்திருந்தேன். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இயக்கத்திற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். என்னை பற்றி சமூகவலைதளத்தில் தவறாக பதிவிடும் நபர்களுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
நான் துரோகியா?
இந்நிலையில், மல்லை சத்யா வைகோவிற்கு பதில் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். மவுனம் கலைக்கின்றேன். மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணமில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு துரோகம் இழைத்த மாத்தையாவுடன் என்னை ஒப்பிட்டு வைகோ பேசியிருக்கிறார். சான்றோர் பெருமக்களே நான் மாத்தையா போன்ற துரோகியா? நீதி சொல்லுங்கள். என் அரசியல் வாழ்வில் வைகோவுக்கு எதிராக நான் பேசியிருந்தேன், செயல்பட்டிருந்தேன் என்றால் இளங்கோ அடிகளாரின் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற நீதி நின்று என்னை சுட்டெரிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
விஷம் குடித்து இறந்து போயிருப்பேன்
தனது மகன் துரை வைகோவின் அரசியலுக்காக 32 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையோடு உண்மையாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகி என்கிற பழியை வைகோ சுமத்தியுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை என்னால் தூங்க முடியவில்லை. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு அவர் வேறு ஏதாவது குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் குடிக்க சொல்லியிருந்தால் செத்துப் போயிருப்பேனே. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கிறேன் என மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.





















