ஜாதி ஒழிப்பை பேசுகிற கட்சிகளில் இருந்து ஒருவர் முதல்வராவது கடினம்; ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நன்றி - திருமாவளவன்
மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த 2003-ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.
2003 -ம் ஆண்டு நடைபெற்ற பேரணி
மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர்.
காவல்துறையினருக்கும் விசிகவினருக்கும் இடையே மோதல்
அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு
இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு கடந்த ஜுலை 31 -ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் இதுநாள் வரை விசாரணைக்கு ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் பிடியானை பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து. இவ்வழக்கினை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனைத் அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் எம்.பி திருமாவளவன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகஸ்ட் 2 -ம் தேதி தாக்கல் செய்ததால் பிடிவாரண்டு உத்தரவை திரும்ப பெறும் மனுவை ஏற்ற நீதிபதி விஜயகுமாரி வருகின்ற ஆகஸ்டு 27 -ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றார்.
பொய் வழக்கு
அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக முன்னதாக 18 பேர் ஆஜரான நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில் அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி தனது தரப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 11 -ம் தேதி க்கு நீதிபதி ஆர்.விஜயகுமாரி ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நேரில் வந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் மீது போடப்பட்டது கிரிமினல் வழக்கு இல்லை. மக்களுக்கான அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது சட்டம்-ஒழுங்குக்காக போடப்பட்ட பொய் வழக்குகள்தான். இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நன்றி
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் திருமாவளவனே முதல்வராக வேண்டுமென்று பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஜாதிய இறுக்கம் தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் உள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவில் வயது மூப்பு, கட்சியில் பங்களிப்பு ஆகிய அடிப்படையில் சிலர் கட்சி பிரதிநிதிகளாக, முதல்வர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் அம்பேத்கர் கொள்கைகள், ஜாதி ஒழிப்பை பேசுகிற கட்சிகளில் இருந்து ஒருவர் முதல்வராவது கடினம். அரசியல் களத்தில் ஜாதிய இறுக்கம் வெகுவாக இறுகிபோய் கிடக்கிறது. அதனை எனது பேச்சில் இயல்பாக குறிப்பிட்டேன். உள்ளோக்கத்துடனும், திமுக அரசுக்கு எதிராக பேசியதாக பலர் திரித்து பேசுகிறார்கள்.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது மத்திய, மாநில அரசு இணைந்து நடத்திய அரசு விழா கூட்டணிக்கு சம்பந்தமில்லாதது. மீனவர்கள் கைது செய்யப்படுவது, உடமைகள் சேதப்படுத்தப்படுவது நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மாறினால் ஈழப்பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்று பலர் கூறினர். ஆனால், ஆட்சி மாறி 10 ஆண்டுகள் ஆனபிறகும் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றார்.