மகாராஷ்டிராவில் ஓய்ந்தது பரப்புரை: கடைசியில் டெக்னிக்கலாக காங்கிரசுக்கு டஃப் கொடுத்த பாஜக! வெற்றி யார் பக்கம்?
மகாராஷ்டிரா மாநிலத்தில், வரும் நவம்பர் 20 ஆம் தேர்தி சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பரப்புரையானது ஓய்ந்தது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்:
மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது, வரும் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலானது நடைபெறவுள்ளது.
அரசியல் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலானது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது.
மகா விகாஸ் அகாதி vs மகா யுதி
இந்நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியும், மகா யுதி கூட்டணியும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனாவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
மகா யுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவில் , 48 தொகுதிகளில் 30 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அந்த வேகத்துடன் , சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி நினைத்தது.
டஃப் கொடுத்த பாஜக:
ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவை பார்த்து, சற்று சுதாரித்துக் கொண்ட பாஜக, சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தவும் செய்தது.குறிப்பாக பெண்களுக்கான ரூ. 1,500 வழங்கியது பெரிதும் பேசு பொருளானது. மேலும், பரப்புரையை தீவிரப்படுத்தியது பாஜக கூட்டணி, பாஜக முக்கிய தலைவர்கள் தினமும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பரப்புரைகளை தீவிரமாக மேற்கொண்டனர். இதனால், ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட்டணியின் பக்கம், சற்று வெற்றியின் காற்று இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இப்பொழுது போட்டியானது கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் கூட்டணியினர் பெரிதளவில் பரப்புரையில் தீவிரம் காட்டவில்லை என்றும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் , தீவிரமாக பரப்புரையில் ஈடுபடுவதையும் பார்க்க முடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Video: பரபரப்பு.! தேர்தல் தலைவர் மீது கருப்பு மையை ஊற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்: நடந்தது எங்கு?
யார் வெற்றி பெறுவர்?
மகாராஷ்டிராவில், விலைவாசி உயர்வு,வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவைகள் தீவிர பிரச்னைகளாக மக்கள் பார்க்கின்றனர். இதனால் ஆளும் பாஜக கூட்டணியின் மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது. கடைசி நேரத்தில் திட்டத்தை செயல்படுத்தி மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கருத்துகள் எழுவதை பார்க்க முடிகிறது. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள்ளே முரண்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அஜித் பவார்,கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது, ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸ் இடையிலான உரசல் வெளிப்படையாகவே தெரிகிறது என்றும், அவர்கள் கூட்டணியினரே வெற்றி பெறக் கூடாது என நினைப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதனால், மகாராஷ்டிரா மாநிலத்தின் முடிவுகளில் , தற்போது யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பது கடினம் என்றே பார்க்க முடிகிறது. இரு கூட்டணிகளுக்கிடையே போட்டியானது கடுமையாக இருக்கும் என்றே தகவல் தெரிவிக்கின்றன.