Lok Sabha Security Breach: மக்களவைக்குள் அத்துமீறிய நபர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய பாஜக எம்.பி: பின்னணி தெரியுமா?
22 ஆண்டுகளுக்குப் முன்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு மக்களவையில் இதே தினத்தில் ஒரு பாதுக்காப்பு அத்துமீறல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளிலும் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ள நிகழ்வுதான் இந்திய பாராளுமன்ற மக்களவையில், பார்வையாளர்கள் வரிசையில் இருந்த இருவர் மக்களவை உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அத்துமீறி குதித்து புகைக் குண்டுகளை வீசியதுதான். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேவும் இருவர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும், வேலையின்மை, விலைவாசி உயர்வு குறித்து போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அத்துமீறலினால் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகின்றது. 22 ஆண்டுகளுக்குப் முன்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு மக்களவையில் இதே தினத்தில் ஒரு பாதுக்காப்பு அத்துமீறல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மீறல் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மக்களவை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஐந்து நிலை பாதுகாப்புகளை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்களவை பார்வையாளர்கள் அறைக்கு வரமுடியும். மேலும் பார்வையாளர்கள் கேலரிக்கு ஒருவர் வரவேண்டும் என்றால் ஒரு மக்களவை உறுப்பினர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் என யாரேனும் ஒருவரிடத்தில் கையொப்பம் பெறவேண்டும். இந்நிலையில் மக்களவைக்குள் புகைக் குண்டுகளை வீசியவர்கள் மைசூரைச் சேர்ந்த பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் அனுமதிச் சீட்டினை பெற்று மக்களவைக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூரில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். காவல்துறையின் கூற்றுப்படி, மக்களவைக்குள் குதித்தவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது அவரது அதாவது பிரதாப் சிம்ஹா தொகுதியுடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய மனோரஞ்சன் பெங்களூருவில் உள்ள மைசூர் விவேகானந்தர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் பட்டதாரி. இவரது சொந்த ஊர் மைசூர் விஜயநகரம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதாப் சிம்ஹா கடந்த 2014 ஆம் ஆண்டு மைசூர் மக்களவைத் தொகுதியில் 43.46% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் 52.27% வாக்குகளைப் பெற்று மீண்டும் மக்களவைக்குச் சென்றார். 42 வயதான அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் என்று நன்கு அறியப்பட்டவர். 2007ல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். விவசாயியின் மகனான அறியப்படும் எம்.பி., பிரதாப் சிம்ஹா பிரதமர் மோடிக்கு சிலை வைப்பதாக முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.
இன்று மதியம் 1 மணியளவில், மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா பார்வையாளர்கள் கேலரியில் இருந்து மக்களவையின் அறைக்குள் குதித்தனர். சாகர் மேசைகள் மீது குதித்து சபாநாயகர் நாற்காலியை நோக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது, மனோரஞ்சன் ஒரு குப்பியில் இருந்து மஞ்சள் நிற புகையை கக்கும் குண்டினை மக்களவையில் அவர் நடந்த இடங்களில் எல்லாம் புகையை பரவச் செய்தார்.
நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என அடையாளம் காணப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் பாராளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைக் குப்பிகளுடன் தடுத்து நிறுத்தப்பட்டது மட்டும் இல்லாமல் கைதும் செய்யப்பட்டனர்.