காமராஜருக்கும், ராஜாஜிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. வாலி சொன்ன ரகசியம்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி மற்றும் காமராஜர் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று? வாலி ஒரு முறை ஒரு சம்பவத்தால் விளக்கமாக கூறியிருப்பார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலி. காலத்திற்கும் அழியாத காவிய பாடல்களை எழுதியவர் என்றும், தலைமுறைக்கு ஏற்ப பாடல்களை எழுதியவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வாலி. தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நேரடியாக பழகியவர்.
இவர் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் காமராஜருக்கும், ராஜாஜிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பேசியிருப்பார். அதில் அவர் கூறியதாவது,
இரு துருவங்கள்:
"காமராஜரும், ராஜாஜியும் இரு துருவங்களாக அரசியலில் இருந்தார்கள். 1952 தேர்தலின்போது கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவிற்கு மெஜாரிட்டி வந்தது. அப்போ, காமராஜரை காப்பாத்துறதுக்கு ராஜாஜியை விட்டா ஆள் இல்லை என்று சொல்லி, ஃப்ரேம்க்குள்ள ராஜாஜி வராரு. அப்போ ப்ரைம் மினிஸ்டர்னுதான் பேரு. பிரசிடன்சிதான் இருந்தது.
வாலி வரைந்த படம்:
அப்போ, இரண்டு பேரு சேந்து வண்டியில ஒன்னா வர்றாங்க. ஒரு ட்ரெயின்ல பக்கத்து, பக்கத்து பர்ஸ்ட் கிளாஸ் கம்பாட்மண்ட்ல அதுல காமராஜர், இதுல ராஜாஜி வர்றாங்க. எல்லா ஊருக்கும் ஒரு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருப்பாருல. நான் ராஜாஜி படத்தையும் வரைஞ்சு, காமராஜர் படத்தையும் வரைஞ்சு உங்ககிட்ட கையெழுத்து வாங்கனும்னு சொன்னேன்.
சரி வாடா ரயில்வே ஸ்டேஷனுக்குனு சொன்னாரு. காலையில 6 மணிக்கு வந்தது அந்த ட்ரெயின். 5 நிமிஷம்தான் அங்க நிற்கும். ராஜாஜிகிட்ட கையெழுத்து வாங்க என்ன கூப்பிட்டு போய் இந்த பையன் உங்க படத்தை வரைஞ்சு இருக்கானு சொன்னாரு. ராஜாஜி இப்படி பார்த்தாரு.
காமராஜர், ராஜாஜி ரியாக்ஷன் என்ன?
ராஜாஜியோட கையெழுத்து எனக்குத் தெரியும். இராஜகோபாலாச்சாரினுதான் எழுதுவாரு. ஆனா, ராஜகோபாலாச்சாரினு இப்படி எழுதுனாரு. நான் கல்கி தீபாவளி மலர்ல உங்க கையெழுத்து பாத்துருக்கேன் சார். உங்க கையெழுத்து மாதிரி இல்லையேனு சொன்னேன். அதுக்கு ராஜாஜி படமும் என் மாதிரி இல்லையே, அதுனால கையெழுத்து என் மாதிரி இல்லையே என்று சொன்னார்.
உடனே பக்கத்து கம்பார்ட்மென்ட்ல காமராஜர்கிட்ட போனேன். ட்ரெயின் புறப்படபோது. காமராஜர் படத்தை பாத்த உடனே கு.காமராஜர்னு தமிழ்ல அழகா கையெழுத்து போட்டு ரொம்ப நல்லா இருக்குதுனு முதுகுல தட்டிக்கொடுத்தாரு. நான் இறங்கிட்டேன்.
இதுதான் வித்தியாசம்:
அவரு படம் என்ன மாதிரி இல்லைனு சொல்லிட்டாரு. இவரு உடனே போட்டுக் கொடுத்துட்டாரு. அது காமராஜர் காதுல விழுந்த உடனே, அந்த ஸ்ரீரங்கம் தலைவர் பேரு சத்தியமூர்த்தியை கூப்பிட்டார். இந்த படமும் என் மாதிரிதான் இல்ல. பாவம் அந்த பையன் ஆசையா வரைஞ்சு இருக்கானே. வருத்தப்பட போறானேனு போட்டுக்கொடுத்தேன். அதான் காமராஜர். வித்தியாசத்தை பாருங்க."
இவ்வாறு அவர் பேசியிருப்பார்.
ராஜாஜி 1937ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை அப்போதைய சென்னை மாகாணத்தின் பிரதமராக( அப்போது இந்த பெயரிலே அழைக்கப்பட்டது) பதவி வகித்தார். அதன்பின்னர், 1952 முதல் 1954ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1954 முதல் 63 வரை சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்தார்.




















