AIADMK: அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்....கரூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
அதிமுக ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து கரூர் பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க என்ற கோஷங்களோடு பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இபிஎஸ் ஏற்பாட்டில் செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஓபிஎஸ் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணி அளவில் கூறப்படும் என அறிவித்திருந்த நிலையில் 9 மணிக்கு தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் என இபிஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
அதை தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை வீசிக்கொண்டு அந்த இடத்தை கலவர பூமி ஆக்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திலும், இபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் இடத்திலும் இருந்தனர். அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழுவில் ஏக மனதாக அதிமுக சட்ட விதிகளை மாற்றி அமைத்து, தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே .பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு கூட்டத்தில் ஏக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
பின்னர் எடப்பாடி வாழ்க, ஒற்றை தலைமை வேண்டும், நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி தான் என்ற கோஷம் எழுப்பியவாறு அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கரூர் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இருப்பது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்