சென்னையில் எ.வ.வேலுவின் வீட்டில் ஐ.டி. சோதனை நிறைவு
சென்னை, ஆழ்வார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று காலை நிறைவு பெற்றது.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, ஆழ்வார்பேட்டையில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி, அலுவலங்களில் நேற்று முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் 16 மணிநேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று காலை நிறைவு பெற்றது. திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த, எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.