Cement price reduced: முதலமைச்சர் கோரிக்கை ஏற்று சிமெண்ட் விலை குறைப்பு!
சிமெண்ட் விலை 435 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிமெண்ட் விலை மூட்டைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களில் மட்டும் 40% வரை உயர்ந்தன. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை, 41% உயர்ந்து ரூ.520 ஆக இருந்தது. அதேபோல் ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட்டின் விலை 3,400 ரூபாயிலிருந்து ரூ.3900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லியின் விலை 3,600 ரூபாயிலிருந்து ரூ.4100 ஆகவும் உயர்ந்தன. எம் - சாண்ட் ஒரு யூனிட் விலை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், கட்டுமானக் கம்பி ஒரு டன் ரூ. 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாகவும், செங்கல் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 24 ஆயிரமாகவும் அதிகரித்தது.
சிமெண்ட் விலையை குறைக்கக் கோரி பலர் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலையை 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலை 1100 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய விலையில் இருந்து மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிமெண்ட் விலை 435 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களில் சிமெண்ட் விலை 55 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.490க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையீட்டை அடுத்து ரூ.460ஆக குறைக்கப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலை மேலும் குறைக்கப்படும் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் உறுதி அளித்திருந்தனர். சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் அளித்திருந்த உறுதியையொட்டி சிமெண்ட் விலை மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிகரித்து வந்த கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். விலை குறைப்புக்கு பின் தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.435க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் தில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திரா ரூ.370, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40%க்கும் கூடுதலாக ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது" என குற்றச்சாட்டியிருந்தார்.
சிமெண்ட் விலை உயர்வதற்கான காரணம் என்ன?- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்