(Source: ECI/ABP News/ABP Majha)
சிமெண்ட் விலை உயர்வதற்கான காரணம் என்ன?- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்
தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை உயர்ந்ததற்கான காரணம் தொடர்பாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை மடமடவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பாக தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாய் ஆக இருந்தது. அந்த விலை திடீரென அதிகரித்து தொடர்பாக கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விலை உயர்வு தொடர்பாக தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிமெண்ட் தொழிற்சாலைகளும் தற்போது கடும் சவாலான சூழலை சந்தித்து வருகிறது. 35-40 சதவிகிதம் உற்பத்தியை மட்டுமே சிமெண்ட் தொழிற்சாலைகள் செய்து வருகின்றன. எங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை ஊரடங்கிற்கு முன்பாகவும் தற்போதும் நாங்கள் காத்து வருகிறோம்.
எனவே அவர்களை காப்பதற்காகவும் எங்களுடைய வாழ்வாதாரத்திற்காகவும் தான் சிமெண்ட் விலையை அதிகரித்துள்ளோம். மேலும் சிமெண்ட் விலை என்பது கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களில் மிகவும் சிறியது. ஆகவே இதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் விலையை ஏற்றினோம். எனினும் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எங்கள் முடிவை மாற்றியுள்ளோம். அதாவது இந்த இக்கட்டான கொரோனா சூழலில் மக்களுக்கு உரிய மற்றும் நியாயமான விலையில் சிமெண்ட் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
அத்துடன் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்படும். மேலும் தமிழ்நாடு அரசு வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சிமெண்ட் விலை அதிகரிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அந்த நிறுவனங்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் தில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திரா ரூ.370, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40%க்கும் கூடுதலாக ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது" என குற்றச்சாட்டியிருந்தார்.
இந்தச் சூழலில் தற்போது தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கை அதை தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்