Udhayanidhi Stalin: எனக்கு நீங்கதான் பெரியார், அண்ணா.. கட்சி விழாவுக்கு நான் வரணும்னா இதுதான் ரூல் - உதயநிதி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி 100 சதவீதம் வெற்றிபெறும் என்று ஓசூரில் நடந்த விழாவில், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். ஓசூர் சீதாராம்நகரில் கட்சிக்கொடியேற்றி வைத்த அவர், தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கட்சியில் நலிவுற்ற 600 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா வரவேற்றார்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியபோது, கட்சி நிர்வாகிகள் என்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள, கட்சிக்காக உழைத்த நலிவுற்ற மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்த வேண்டும், அப்போது தான் நான் விழாவிற்கு தேதி கொடுப்பேன் என்று அனைவரிடமும் கூறி வருகிறேன். நான் கருணாநிதியை பார்த்துள்ளேன். பெரியார், அண்ணாவை பார்த்ததில்லை. ஆனால் அவர்களின் மறு உருவமாக, கட்சியின் மூத்த முன்னோடிகளை தான் நான் பார்த்து வருகிறேன். நீங்கள் எங்களை வழி நடத்தி செல்லுங்கள். உங்கள் பாதையில் நாங்கள் பயணம் செய்ய தயாராக உள்ளோம்.தொடர்ந்து வரும் தேர்தல்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுக வெற்றி பெற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி 100 சதவீதம் வெற்றிபெறும். முதலமைச்சர் ஸ்டாலின், 24 மணி நேரமும், தமிழக மக்களின் நலனுக்காக சிந்தித்து ஓயாது உழைத்து வருகிறார். என இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உரையாற்றினார்.இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வி.கணேசன் ஆகியோர் பேசினார்கள்.
ஓசூர் மிடுகரபள்ளியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 57 பெரிய முகாம்கள் உள்பட 606 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த ஆட்சி தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களுக்கான ஆட்சியாகும். முதல்-அமைச்சர் அடிக்கடி சொல்வதைப்போல, இது மக்களுக்கான ஆட்சி. தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்களிக்காதவர்கள், நாம் வாக்களிக்க தவறிவிட்டோமோ? என்று வருத்தப்படும் வகையிலும் இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்த தமிழக மக்கள், உள்ளாட்சி தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றியை தந்துள்ளனர் என்றார்.