திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை தேடித்தேடி மனு கொடுத்தவர்கள் இன்றைக்கு ஆளுநரை விமர்சிக்கிறார்கள் - ஆளுநர் தமிழிசை
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை தேடித்தேடி மனு கொடுத்தவர்கள் தான் இன்றைக்கு ஆளுநரை விமர்சிக்கிறார்கள் - வேலூரில் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

வேலூரில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணி தங்க கோவில் வளாகத்தில் இன்று நடைபெற்ற 31-ஆம் ஆண்டு விழாவும், மற்றும் ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்திலும் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அதன் பிறகு அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலின் சார்பில் மாலை அணிவித்து கோவிலின் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மிகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறிவருகிறார்கள் அது ஏற்புடையதல்ல. ஆன்மீகமும் தமிழும் ஒன்று தான். தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்திக்கும் மற்றும் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வதில்லை.
முதல்வர், ’நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை’ என சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் முதல்வரிடம் கேட்டறிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை. ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை தேடி தேடி சந்தித்து புகார் கொடுத்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும் எங்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறிவருகிறார்.
அதே போல் நான் தெலுங்கான செல்லாமல் புதுவையிலேயே அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார். இதற்காக உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். இதற்கு கூடவா அவர் உண்டியல் குலுக்க வேண்டும். அதற்கான தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமானம் உள்ளது. இதை கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். இந்தியாவில் கொரோனா இல்லாமல் போனதற்கு ஆன்மீகமும் அறிவியலும் தான் காரணம்” என்று தெரிவித்தார்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

