TN Governor Case: ”ஆளுநரின் செயல் சட்டவிரோதம்” - தமிழக அரசு கூடுதல் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை
TN Governor Case: ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது என ஆர்.என். ரவிக்கு எதிராக வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுவ தாக்கல் செய்துள்ளது.
TN Governor Case: நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுளது.
தமிழ்நாடு அரசு கூடுதல் மனு:
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் திருத்தப்பட்ட கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “கடந்த நவம்பர் 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வழக்கு விவரம்:
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, மசோதாக்கள் மீது ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 13 ஆம் தேதி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அதே மசோதாக்களை நவம்பர் 18-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றியது. இதையடுத்து, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மசோதாக்கள் நிலுவையில் இருப்பது குறித்து ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உச்சநீதிமன்றம் காட்டம்:
அதற்கு, மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு வந்த மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க, ஆளுநருக்கு உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக தான், ”மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது எனவும், 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும்” தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.