‘அன்று நல்ல வாய்? இன்று நாற வாய் வைத்து பொய் சொல்லும் இபிஎஸ்’ - எம்எல்ஏ வைத்திலிங்கம் விமர்சனம்
2021ம் ஆண்டு தேர்தலில் வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அன்றைக்கு நல்ல வாய் வைத்து பேசியவர்.
தஞ்சாவூர்: 2021ம் ஆண்டு தேர்தலில் வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. அன்றைக்கு நல்ல வாய் வைத்து பேசியவர். இன்றைக்கு நாற வாயை வைத்து, என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல், பொய்யை பேசியுள்ளார் என்று பதிலடி கொடுத்துள்ளார் எம்.எல்ஏ. வைத்திலிங்கம்.
நேற்று மாலை அதிமுக சார்பில் ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரத்தநாட்டிற்கு வைத்திலிங்கம் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டி பேசினார். இந்நிலையில் தஞ்சையில் இன்று நிருபர்களை எம்எல்ஏ வைத்திலிங்கம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்கவில்லை. யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்று ஒரத்தநாடு மக்களுக்கு தெரியாதது போல, பொய்யை பேசியுள்ளார்.
தமிழகத்தில் இரண்டு கால்நடை மருத்துவக்கல்லுாரிகள் தான் இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலிலதாவிடம் கேட்டு, ஒரத்தநாட்டிற்கு மூன்றாவது கால்நடை மருத்துவக்கல்லுாரியை கொண்டு வந்தேன். வேளாண்மை கல்லுாரியும், ஐ.டி.ஐ., பேராவூரணியில் கலைக்கல்லுாரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லுாரி கொண்டு வந்தேன்.
தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சிக்காக தரம் உயர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை கொண்டு வந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சாவூர் மாபொரும் வளர்ச்சியடைந்துள்ளது. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
அதே போல வேலைவாய்ப்புகளில், சுமார் ஆயிரம் பேருக்கு மேல் என்னால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நிறைய மாணவர்கள் பொறியியல்,வேளாண்,மருத்துவக்கல்லுாரியில் படிப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்துள்ளேன்.
இதே எடப்பாடி பழனிச்சாமி 2021ம் ஆண்டு தேர்தலில், வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என தேர்தல் பிரச்சாரத்தில், அவரை கூறியுள்ளார். அன்றைக்கு நல்ல வாய் வைத்து பேசியவர். இன்றைக்கு நாற வாயை வைத்து, என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல், விரகத்தியின் விளிம்பில் நின்று, தான் முதல்வராக இருந்தோமே என்ற எண்ணம் கூட இல்லாமல், தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசி விட்டு சென்றுள்ளார்.
நான் எதையும் கேட்கவில்லையாம். தஞ்சாவூருக்கு சட்டக்கல்லுாரி வேண்டும் என கேட்டேன். மாவட்ட நீதிமன்றம் இடம் பெயர்ந்து விட்டது. அது காலியாக உள்ளது என்றேன். அப்போது, நீங்கள் தான் ஜெயலிலதாவிடம் எல்லாவற்றையும் கேட்டு பெற்று விட்டீர்கள் சட்டக்கல்லுாரி அமைக்க 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என சொன்னாரா இல்லையா இந்த எடப்பாடி பழனிசாமி. இப்படி தவறான தகவலை பேசியுள்ளார்.
ஆயிரம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார். துரோகி ஓ.பி.எஸ்.,சும், துரோகி தினகரனும் இணைந்து விட்டார்கள் என கூறியுள்ளார். இதே எடப்பாடி பழனிச்சாமி தான் ஆர்.நகர் தொகுதியில் தினகரனை வேட்பாளராக நிறுத்தி, அவரை போல் வல்லவர் இல்லை. அவரை போல் அரசியல் வித்தகர் இல்லை என பிரச்சாரத்தில் பேசினார். இப்படி முன்னுக்கு பின் முரணாக, தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தி பேசுவது.
இன்றைக்கு ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் சந்தித்து விட்டதால், தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால், என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருகிறார்.
சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாத என கூறினேன். காமராஜ் பேசிய போது, இ.பி.எஸ்.,சை சண்டிக்குதிரை இல்லை, பந்தயக்குதிரை என பேசியுள்ளார். எட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தவரை பந்தயக்குதிரை என பேசிய காமராஜூக்கு அறிவு உள்ளதா?,
அ.தி.மு.க.,வை அழித்துக்கொண்டு இருக்கிற எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.,வை விட்டு செல்ல வேண்டும். அவரை தவிரித்து விட்டு, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம். துரைக்கண்ணுக்கு சிலை திறப்பதை நான் தடுத்தேன் என கூறினார். இப்படி பொய்யாக சொல்லுகிறார். அவர் கூறி ரகசியத்தை வெளியில் கூறினால், அசிங்கமாகி விடும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார்.
தமிழகம் பல முதல்வர்களை கண்டுள்ளது. அவர்கள் எல்லாம் மிகவும் மரியாதையாக இருந்தனர். ஆனால், முதல்வர் என்ற தகுதியை இல்லாத ஒரு நபர் இருந்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். நம்பிக்கை துரோகி. மக்களின் ஆதரவும், பேச்சு திறமையும் இல்லாமல், திராவிட இயக்க வரலாறு தெரியாதவர் தான் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். நன்றியை இல்லாத மனிதர் என்றால், எடப்பாடி பழனிசாமி தான். எங்களை செத்த பாம்பு என சொல்லுகிறார். அவர் நாங்கள் நசுக்கிக் கொன்ற பாம்பு. நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து, ஒரு ஓட்டு அதிமாக எங்களை விட வாங்கி விட்டால், நாங்கள் அரசியல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.