மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பனாஜி தொகுதி சீட் மறுப்பு.. சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவிப்பு!
கோவா தேர்தலில் தனது தந்தையின் பனாஜி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், மனோகர் பாரிகரின் மகன் உத்பால் பாரிகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்த மனோகர் பாரிகரின் மகன் உத்பால் பாரிகர் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், கோவா சட்டமன்றத் தேர்தலில் தனித்து சுயேச்சையாகப் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் பனாஜி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அவரது மகன் உத்பால் பாரிகர். எனினும், தற்போதைய எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக இருப்பதால், பாஜக உத்பால் பாரிகருக்கு சீட் வழங்க மறுத்துள்ளதால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
`மனோகர் பாரிக்கர் பனாஜி தொகுதியில் இருந்து 20 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார். பனாஜியுடன் அவருக்குத் தனித்த உறவு உருவாகியிருந்தது; எனக்கும் அதே உறவு தற்போது பனாஜியுடன் உருவாகியுள்ளது. நான் என் மதிப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் உத்பால் பாரிகர்.
கடந்த ஜனவரி 20 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்பால் பாரிக்கரை ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு வரவேற்றிருந்தார். உத்பால் பாரிகரின் பெயர் பாஜகவின் கோவா சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாததால், அவரை ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
எனினும், உத்பால் பாரிகர், `நான் போட்டியிடுவதற்காக என் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருந்தும், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்னிடம் இரண்டு தேர்வுகளே உண்டு. ஒன்று பாஜகவின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது; அல்லது தனியாக சுயேச்சையாகப் போட்டியிடுவது. தற்போது சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
I will be contesting as an Independent candidate from Panaji constituency: Utpal Parrikar, son of late former CM Manohar Parrikar#GoaElections pic.twitter.com/FsBomEeRwk
— ANI (@ANI) January 21, 2022
கடந்த ஜனவரி 20 அன்று கோவா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான 34 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் பனாஜி சட்டமன்றத் தொகுதிக்குத் தற்போதைய எம்.எல்.ஏ அடானாசியோ மான்செர்ரேட்டின் பெயர் இடம்பெற்றிருந்தது. சுமார் 25 ஆண்டுகளாக பனாஜி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மனோகர் பாரிகர். கடந்த 2019ஆம் ஆண்டு, அவர் உயிரிழந்த போது, அவரது தொகுதி அடானாசியோ மான்செர்ரேட்டிற்கு வழங்கப்பட்டு, இடைத்தேர்தல் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.