"ஸ்டாலினை வைத்து காங்கிரஸ் ஆடும் நாடகம்" அடித்து சொல்லும் கிஷன் ரெட்டி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஸ்டாலினை முன்னணியில் வைத்து காங்கிரஸ் நாடகம் ஆடுவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாக்க திமுக அரசு இப்படி செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
திமுக மீது பரபர குற்றச்சாட்டு:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிஷன் ரெட்டி, "தெற்கில் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும். சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கூட்டிய தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் தெற்கில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறது.
தொகுதிகள் மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று சந்தர்ப்பவாதக் கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தை செய்கின்றன. தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசிலும் பாஜகவிலும் எந்த விவாதமும் நடக்கவில்லை.
டாஸ்மாக் ஊழலுக்கு (தமிழ்நாடு முதல்வர்) ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, (அவர்கள்) மொழி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பாஜகவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தைப் பரப்புகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த, குடும்ப ஆட்சி நடந்து வருகிறது.
"ஸ்டாலினை வைத்து காங்கிரஸ் ஆடும் நாடகம்"
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்காகவும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் பாடுபட்டு வருகிறார். சனிக்கிழமை சென்னையில் கூடிய கட்சிகள் தங்கள் சுயநல நலன்களுக்காக செயல்படுகின்றன. அவை இல்லாத ஒரு பிரச்சினையை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று தவறான பிரச்சாரத்தை மேற்கொண்ட அதே கட்சிகள், தேர்தல் முடிந்ததும் அந்த விஷயத்தை வசதியாக மறந்துவிட்டன. எதிர்காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நீதியை உறுதி செய்யும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பே ஒரு வருடத்திற்கு மேல் நடக்கும். ஸ்டாலினை முன்னணியில் வைத்து காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது. (பி.ஆர்.எஸ் தலைவர்) கே.டி.ஆரும் அந்த நாடகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்" என்றார்.