'டிவில இண்டர்வியூ கொடுக்றாங்க.. விசாரணைக்கு வரமாட்டாங்களா?' சசிகலாவை சீண்டிய ஜெயக்குமார்!
சசிகலா ஏன் நேரடியாக சென்று விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற கேள்விகளோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 600 பக்கம் கொண்ட அறிக்கையை ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுக சாமி நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை குறித்து நாளை சட்டபேரவையின் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அறிக்கை தாக்கல் செய்த பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுக சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவந்த விதத்தில் சந்தேகதன்மையான எதுவும் இல்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை. அதேபோல், சசிகலா நேரில் வர தயாராகயில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை “ என்றார்.
இந்த நிலையில், சசிகலா ஏன் நேரடியாக சென்று விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற கேள்விகளோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ”அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் யாருக்கும் இடமில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கருவாடு மீண்டும் மீன் ஆகாது. ஒரு கமிஷன் வந்து உண்மையை நிலைமையை பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும். அதையேதான் அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
View this post on Instagram
அம்மாவின் மரணத்தில் உண்மையாகவே சந்தேகம் இருக்கிறது. அதை வெளிப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் முதல் அதிமுக தொண்டர்கள் வரை அம்மாவின் சந்தேகத்திற்க்குறிய மரணத்திற்கு சசிகலா தான் என்று நம்பப்படுகிறார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு 2 மணி நேரம் வீட்டில் என்ன நடந்தது ? மருத்துவமனையில் எப்படி அனுமதித்தோம் என்று பேட்டியளித்த சசிகலா, ஏன் ஆணையத்திற்கு நேராக வந்து வாக்குமூலம் கொடுக்கவில்லை.
மாபெரும் தலைவர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றால், ஆணையத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டாமா ? ” என்று கேள்வி எழுப்பினார்.