Exit Poll Results 2024: வரலாறு படைத்த மோடி.. மூன்றாவது முறையாக பிரதமர்! 400 இடங்களை பெற்றதா என்.டி.ஏ?
ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 339 முதல் 396 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மீண்டும் தட்டித்தூக்கிய பாஜக: ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 153 முதல் 183 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 41.5 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
400 இடங்களை பெற்றதா பாஜக கூட்டணி? டெல்லியில் 4 முதல் 6 இடங்களையும் குஜராத்தில் 25 முதல் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 4 முதல் 6 இடங்களையும் கர்நாடாகவில் 23 முதல் 25 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் 21 முதல் 25 இடங்களையும் மகாராஷ்டிராவில் 22 முதல் 26 இடங்களையும் பாஜக கூட்டணி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 21 முதல் 23 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 26 முதல் 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி மட்டும் 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 60.8 சதவிகித வாக்குகளுடன் 10 முதல் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 0 முதல் 1 தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் ஒரு தொகுதியில் வெற்றிபெறும் என ABP-Cvoter கணித்துள்ளது.