Erode East By Election: எத்தனை பேர் போட்டி?..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதி பட்டியல் வெளியானது
Erode East ByElection Final Candidates List: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற, இன்று மாலை 3 மணியுடன் கால அளவு முடிவடைந்த நிலையில், 8 பேர் வாபஸ் பெற்றதையடுத்து, மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர். இதனுடன் வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி:
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிஉ பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார்.
இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் காலமானார். இதனால் 5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
திமுக - நாதக
ஆனால், இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிட காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. திமுக சார்பில் தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
பொதுவாக தமிழ்நாட்டு அரசியலில் திமுக கூட்டணி -அதிமுக கூட்டணி என்ற இருமுனைப்போட்டியே நிலவும். ஆனால், இம்முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக - நாதக என்ற புதிய இருமுனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது திமுகவிற்கு மிகவும் சாதகமான சூழலாகவே கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தது, ஆளும் கட்சிக்கு, வெற்றியை எளிதாக பரிசளிப்பது போல் அமைந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் - 10.01.2025
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 17.01.2025
வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 20.01.2025
வாக்குப்பதிவு - 05.02.2025
வாக்கு எண்ணிக்கை - 08.02.2025
47 பேர் போட்டி:
இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்றுடன் காலம் நிறைவடைந்த நிலையில், 8 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர். இதுனுடன் வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு #NTK #Seeman #ErodeByElection pic.twitter.com/VFSW7MMEDA
— ABP Nadu (@abpnadu) January 20, 2025
திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.





















