CM MK Stalin: "கண் டாக்டரிடம் சென்று கண்ணாடி வாங்கி போட்டு பாருங்க" - இபிஎஸ்சை கலாய்த்த முதலமைச்சர்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர்:
அப்போது, அவர் பேசியதாவது, “ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் அது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய எம்.எல்.ஏவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, கூட்டணியில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வாக இருந்தாலும் 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அவர்களிடம் கேட்டு, ஒவ்வொரு ஆண்டும் 10 கோரிக்கைகளை அவர்களிடம் பெற்று அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற திட்டம்தான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர்.
அதேபோலதான், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், இல்லம் தேடிக்கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டங்கள். நான் முதல்வன் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் முதல்வராக இருக்க வேண்டும். அவர்களுடைய கல்வியில், வாழ்க்கை முன்னேற்றத்தில் முதல்வராக வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு படித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களின் திறன் பயிற்சியை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சாதா ஸ்டாலின் அல்ல:
இன்னுயிர் காப்போம், சமத்துவபுரங்கள் உருவாக்கும் திட்டம், உழவர்சந்தைகள், அரசு முன்மாதிரி பள்ளிகள், பத்திரிகையாளர் நல வாரியம், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம், காமராஜர் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டம், முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு, பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதிநாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி கொண்ட ஆட்சி கழக ஆட்சி. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அறிவித்து நிறைவேற்றிக் கொண்டுள்ள ஆட்சி. கலைஞர் மேம்பாட்டு திட்டம், அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தவறான தகவல்களை நான் அளிக்க விரும்பவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்றார். நான் ஆதாரத்துடன் இப்போது படித்தேன். ஒருவேளை உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் கண் டாக்டரிடம் கண்ணாடியை வாங்கி படித்து பாருங்கள். 85 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளோம். 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். எங்களுக்கு 5 ஆண்டுகள் தேவையில்லை. விரைவிலே இந்தாண்டுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்றிக் காட்டுவோம். நான் சாதா ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்துவிடக்கூடாது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க: CM MK Stalin: "சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின்.." - பரப்புரையில் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
மேலும் படிக்க: Erode Election: 'என் உயிரோடு கலந்தது ஈரோடு; ஏன்?' - பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!