தவறு செய்த இபிஎஸ்.. களத்தில் இறங்கும் விஜய்.. பாமக- தவெக- சீமான்- தேமுதிக உருவாகும் புது கூட்டணி ?
அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்காததால், பாமக - தவெக - நாம் தமிழர் கூட்டணி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், பாஜக - அதிமுக கூட்டணி செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனை அறிந்த பாஜக தலைமை, அதிமுகவை சமாதானம் செய்து 2026-ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைக்க முடிவெடுத்தது.
இம்முறை தமிழக தலைவர்களின் நம்பாமல், நேரடியாக அமித்ஷா களமிறங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பிய மாற்றங்களை பாஜகவில் செய்து முடித்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணியை பலப்படுத்த நடவடிக்கை
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி கிடைத்தாலும், 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக படுதோல்வியை சந்திக்கவில்லை.
பல மாவட்டங்களில் கூட்டணி பலத்தால், கணிசமான இடங்களை அதிமுக வென்றிருந்தது. பாமக பலத்தால் வடமாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெற்றி கிடைத்தது. பாஜகவின் பலத்தால் கோவை உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வியை சந்தித்து இருந்தது.
தேமுதிகவிற்கு கெடு
எனவே, 2021 போல, 2026 கூட்டணிக்கு அமைக்க வேண்டிய கட்டாயம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டலில் அங்கம் வகிக்காத, தேமுதிகவை கொண்டு வர வேண்டிய சூழலும் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ராஜ்ய சபா, தேர்தலில் சீட் வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக சேருவதாக இருந்தால், இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உடனடியாக ராஜ்யசபா சீட் கொடுக்காததால், தேமுதிக அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - பாஜக - பாமக கூட்டணிக் கேள்விக்குறி ?
இதுகுறித்து அதிமுக மற்றும் பாமக தரப்பில் விசாரித்தபோது: அதிமுக கூட்டணி முழுமை பெற வேண்டுமென்றால், அதில் பாமக இடம்பெற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. வடதமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கவும், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிகள் சிதறாமல் இருக்க வேண்டுமென்றால், அதிமுக மற்றும் பாமக கூட்டணி உருவாக வேண்டும். எளிதாக பாமகவை ராஜ்ய சபா தேர்தலில், அன்புமணிக்கு ஒரு சீட் கொடுத்து வளைத்து போட்டு இருக்கலாம்.
அன்புமணிக்கு ஒரு சீட் கொடுத்திருந்தால், 2026-ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணி முடிவாகி இருக்கும். அதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவற விட்டுள்ளார். ஏனென்றால், கடந்த சட்டசபை தேர்தலில் போதும், அதிமுக பாமக கூட்டணியில் வாக்குகள் நன்றாக டிரான்ஸ்பர் ஆகி இருந்தன. ஒரு சில தொகுதிகளில் மட்டுமே டிரான்ஸ்பர் ஆகாமல் இருந்தது. ஆனால், திமுகவின் மீது இருக்கும் அதிர்ச்சியால் இந்த முறை வாக்குகள், டிரான்ஸ்பர் ஆகுவதில் பிரச்சனை இருக்காது. எனவே, இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என இரண்டு கட்சி நிர்வாகிகளும் புலம்பி வருகின்றனர்.
புதிய கூட்டணி உருவாகுமா ?
பாமகவை எப்படியாவது தங்கள் பக்கம் அழைத்து வரவேண்டும், என நடிகர் விஜய் ஆரம்பத்தில் இருந்தே விரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பலமுறை பாமக தலைமையிலும், பேசப்பட்டிருக்கிறதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது, தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விஜய் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பாமக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சியும் தன் பக்கத்தைக் கொண்டு வரவும், முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி அமைந்தால், பாமகவின் வாக்கு வாங்கி, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி, விஜயகாந்தின் செல்வாக்கு மற்றும் தனது செல்வாக்கு இணையும்போது, இந்த கூட்டணி 80 இடங்களில் வெற்றி பெற முடியும் என விஜய் நம்புவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















