EPS ADMK: அதிமுகவினர் விரும்பும் கூட்டணி.! தொண்டர்களுக்கு குஷியான தகவலை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியை பற்றி பொதுவெளியில் எதுவும் பேச வேண்டாம், நம்முடைய கூட்டணி தொடர்பாக எந்த கவலையும் வேண்டாம், நீங்கள் விரும்பும் கூட்டணி அது தானாக அமையும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- இபிஎஸ்க்கு வரவேற்பு
அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நீக்கப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக நிர்வாகிகள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் சிலர் பூசணிக்காய் உடைத்தும், தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இன்னும் சிலர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது பூக்களைப் தூவி அவரை ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை காண்பித்து உற்சாகமாக கை அசைத்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்- நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
அப்போது அலுவலக வளாகத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று ஆரவாரத்துடன் கோஷம் எழுப்பி கொண்டாடினர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும், வாக்காளர் திருத்த பணிகளில் அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றி அதிமுகவினர் அனைவரும் முழுமையாக கண்காணித்து விழிப்புடன் செயல்பட வேண்டும், அதிமுக வாக்குகள் எதுவும் நீக்கப்படாத வகையில் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்- இபிஎஸ்
மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும், கூட்டணியை பற்றி பொதுவெளியில் எதுவும், பேச வேண்டாம், நம்முடைய கூட்டணி தொடர்பாக எந்த கவலையும் வேண்டாம், நீங்கள் விரும்பும் கூட்டணி அது தானாக அமையும், வெற்றியை மனதில் வைத்து பணியாற்றுங்கள் என அறிவுறுத்தியாக தெரியவந்துள்ளது. மேலும் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















