EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Slams Stalin: டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

EPS Slams Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ நானும் டெல்லிக்கு போனேன், நானும் தலைவர் தான் என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள் ஸ்டாலின் - போதும்ம்ம்ம்ம். மூன்று ஆண்டுகள் NITIAayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி”க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி”-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…? அதற்க்காண உண்மை பதில் என்ன? ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?
”கொள்ளையடித்த பணம்”
உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே? நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்காண தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று! பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் #MissionSuccess என்ற உங்கள் கூவலுக்கு பின்னால், உங்கள் #MissionFailure ஆன கண்ணீர் நன்றாகப் புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். (முன்னாலும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தால் Nostalgia-வாக இருந்திருக்கும்.)
”கவனம் செலுத்துங்கள்”
அப்புறம், எதிர்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். ஏதேனும் பயன் இருந்திருக்கும். எப்போது பார்த்தாலும் "ரெய்டுகளுக்கு பயந்து" என்று சொல்கிறீர்களே? உள்ளபடியே கேட்கிறேன். எந்த ரெய்டைப் பார்த்து எனக்கு பயம்? இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? , நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள் எனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள். இரு முறை வருமான வரி சோதனைகளைக் சந்தித்தவர்கள். Discrepancies இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை.அரசியல் ரீதீயாக என்னை எதிர் கொள்ள முடியாமல் இது போன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிப்பது வெட்கக்கேடானது.
யார் இந்த ரத்தீஷ்?
மாறாக, உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா ஸ்டாலின்? யார் அந்த தம்பி ? இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசியுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணை:
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அண்மையில் சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ரத்தீஷ் என்பது பெயரும் அடிபட்டது. ஆகாஷ் பாஸ்கரன் முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப உறவினர் எனவும், இவருடன் சேர்ந்து ரத்தீஷ் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.





















