Edappadi Palaniswami: : ”திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான் அவர்களது சாதனை”.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!
அதிமுக பாஜகவின் பி டீம் என்று பேசி வருகிறார்கள். ஆனால் அதிமுக எப்பொழுதும் ஒரிஜினல் டீம்தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் 1000 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கடந்த காலங்களில் திட்டமிட்டு அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக திமுக கட்சி உருவாக்கினார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டது. குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு சிறு பிரச்சினை கூட இல்லாமல், அதிமுக ஆட்சிதான் காப்பாற்றியது” என்று கூறினார்.
தொடர்ந்து, “30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வேறுமதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படுவது வேறு, கொள்கை என்பது நிலையாக இருக்கும் அதிமுக கொள்கை எப்பொழுதும் நிலையானது. அதிமுக பொறுத்தவரை மதம், ஜாதி கிடையாது ஆண், பெண் இரண்டு மட்டும்தான். இது ஜனநாயகநாடு இதில் யாருக்கும், யாரும் அடிமை கிடையாது. அதிமுக எப்பொழுதும் அதை பின்பற்றி இருக்கும்” என்றும் பேசினார்.
மேலும், “அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது என்று தெரிந்தவுடன் இஸ்லாமியர்கள் மீது இப்பொழுது தான் முதல்வர் அக்கறை பேசுகிறார். ஆனால் நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர், அனைத்து மதங்களிலும் நேசிக்கக் கூடியவர். இந்த ஜாதி, மதத்திற்கும் அதிமுக அடிமை, வேற்றுமை கிடையாது என்றார். திமுக சிறுபான்மையின் பாதுகாப்பு அறனாக இருந்து வருவதாக நினைத்து வந்தனர். இஸ்லாமிய மக்களின் வாழ்வு மலர பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இஸ்லாமியர் மக்கள் எப்பொழுது என்னை நேரடி சந்திக்கலாம். மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது கடினம். நான் உங்களுடன் வாழ்ந்தவன், மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது. எந்தெந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளது என்று உணர்ந்தவன். நான் அந்த பிரச்சினை வரும்போது எளிதாக அணுககூடிய நபராக இருந்து வருகிறேன். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை என்றும் தெரிவித்தார். அதிமுக கட்சிதான் சிறுபான்மை மக்களை பாதுகாக்கின்ற கட்சி. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை பாதுகாக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி அதிமுக என்பது போன்று பேசி வருகிறார்.
பாஜகவுடன் கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைக்கப்பட்டது தவிர, அதிமுக கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்று திமுக பேசி வருகிறது. எங்களைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை. இதற்கு முன்பாக ஐந்து ஆண்டு காலம் பாஜகவுடன் கூட்டணியில் திமுக இருந்தது. இதற்கு முன்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி இருந்தபோது, கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன், மக்கள்தான் முக்கியம் என்று உடனே உடைத்துவிட்டு வெளியே வந்தவர் ஜெயலலிதா. சிறுபான்மை மக்களின் உரிமை எப்பொழுது பறிக்கப்பட்டாலும், அதை எதிர்த்து போராடுகின்ற கட்சி அதிமுக தான். நாடாளுமன்றத்தில் எப்பொழுதும் குரல் கொடுக்கும்” எனவும் கூறினார்.
காவிரி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டார்கள். காவிரி தண்ணீரை கேட்டு திமுக அரசாங்கத்தால் பெற முடியவில்லை. அதிமுக ஆட்சியில் போராடி, வாதாடி காவிரி தண்ணீரை பெற்றோம். அந்த தீர்ப்பை அமல்படுத்த முடியாத அரசாங்கமாக திமுக இருந்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. கர்நாடகாவிற்கு சென்று கூட்டணி குறித்து பேசுகிறார்கள், ஆனால் தமிழக மக்கள் குறித்து தமிழக முதல்வருக்கு கண் தெரியவில்லையா..?
மேட்டூர் தண்ணீரை நம்பி தான் 24 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையாக இருந்து வருகிறது. இது கண்ணுக்கு தெரியவில்லை, ஆனால் திமுகவிற்கு பதவிவேண்டும் என்பதுதான் கண்ணாக இருந்து வருகிறது. முறையாக காவிரி தண்ணீர் பெற்றிருந்தால், கருகிய பயிர்களை காப்பாற்றிருக்க முடியும். குறிப்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி, காவிரி தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தால் கூட, விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கும். ஆனால் அதுகுறித்து பேசவில்லை. மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் கருகிவிட்டது. இதனால் அரிசி விலை உயர்ந்துவிடும். தற்பொழுது 10 ரூபாய் ஒரு கிலோவிற்கு அரிசி விலை உயர்ந்துவிட்டது என்றும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் காவிரி தண்ணீருக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஒரு அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் விலைவாசி தொடர்ந்து உயரும். தமிழக மக்களிடையே வருமானம் குறைந்து செலவு அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்த உள்ளனர்.
ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் சிறப்பாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போதைபொருட்கள் அதிகரித்துவிட்டது. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். ஆனால் முறையாக செயல்படுத்தவில்லை. ஏனென்றால் அதை விற்பது திமுகவை சேர்ந்தவர்கள் தான். அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது மட்டுமே அவர்களது சாதனை என்றும் கூறினார். இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவு தரவேண்டும். மக்கள்தான் எஜமானர்கள் அவர்களுக்காக அதிமுக எப்பொழுதும் குரல் கொடுக்கும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக முழுமையாக விலகிவிட்டது. இதற்கு தெளிவாக தெரிவித்துவிட்டேன். அதிமுக பாஜகவின் பி டீம் என்று பேசி வருகிறார்கள். ஆனால் அதிமுக எப்பொழுதும் ஒரிஜினல் டீம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெம்பு, திராணி இருந்தால், திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை நிறைவேற்றி காட்டுங்கள்” என்று சவால் விட்டார்.