எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத் தமிழர் பட்டத்தை கொடுக்கலாம் - தினகரன்
பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இருவரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல உள்ளனர்.
தஞ்சாவூர்: புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. துரோகத் தமிழர் என்ற பட்டத்தை கொடுத்திருக்கலாம். காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு விட்டு, பதவி கொடுத்தவருக்கு துரோகம் செய்தவர் என தினகரன் பேசினார்.
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல. பழனிசாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு. முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம் பேரை மாநாட்டுக்கு கூட்டுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்களுடன் உள்ளவர்கள் என்னிடம் வேதனையுடன் மாநாட்டிற்கு பணமும்,வாகனமும் ஏற்பாடு செய்து ஒரு வாகனத்திற்கு 10 பேர் மட்டுமே வந்தனர் என்று தெரிவித்தனர். அதிகபட்சமாக இரண்டு முதல் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள். இதை ஒரு சைபர் சேர்த்து கூறியுள்ளார்கள். இதுதான் உண்மை.
மதுரையில் உள்ளவர்களும், பலதரப்பட்ட துறையில் உள்ளவர்களும், பழனிசாமி கம்பெனியில் உள்ள சில நண்பர்களும் இதை வேதனையுடன் தெரிவித்தனர். புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். துரோகி பழனிச்சாமிக்கு துரோகத் தமிழர் என்று பட்டம் கொடுத்திருக்கலாம். காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு விட்டு பதவி கொடுத்தவருக்கு துரோகம் செய்தவர். தன் ஆட்சி நீட்டிக்க காரணமாய் இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தவர். துரோகத்தாலும், தவறாக ஈட்டிய பண பலத்தாலும் கட்சியை கபளீகரம் செய்திருப்பது தான் சாதனை. அதற்காக புரட்சி செய்தார் என கூற வேண்டும் என்றால் அது வெட்கக்கேடானது.
முதலில் ஸ்டாலின் பேசுவதெல்லாம் காமெடியாக உள்ளது. அவர் தேர்தலுக்கு முன்பு, கொரோனா நேரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால் இன்றைக்கு அதையே ஹிட்லர் போல முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்கள் ஸ்டாலின் கையில் ஆட்சியை கொடுத்ததை குறித்து வருந்துகின்றனர்.
பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இருவரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல உள்ளனர். இவர்களுக்கு மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பாஜகவுடன் உறவு இல்லை. நண்பர்கள் சிலர் உள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடுவோம்.
கூட்டணி அமைந்தால் தேசிய கட்சிகள் தலைமையில் தேர்தலை சந்திப்போம். தேர்தலுக்கான கூட்டணி என்பது யார் வரக்கூடாது என்பதற்காக தான். எங்களைப் பொறுத்தவரை, தீய சக்தியான திமுக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதுதான். அதற்கான கூட்டணியில் நாங்கள் இருப்போம். கர்நாடகாவில் பதவியேற்கும் போது முதல்வர் ஸ்டாலின் நாகரிகம் எனக் கூறிக்கொண்டு விழாவில் கலந்து கொண்டார்.
ஆனால் அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளவில்லை. தமிழர்களின் ஜீவாதார பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவையே எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம். அணை கட்டுவோம் என அகம்பாவத்தோடு உள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக முதல்வர் வேகமாக செயல்பட்டு, மத்திய அரசுடன் சேர்ந்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்து வருகின்றனர். மத்திய அரசு ஊழல் விவகாரத்தில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் மக்கள் அதற்கு தீர்வு அளிப்பார்கள். ஓபிஎஸ்-ம், நானும் தற்போது இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டோம். வருங்காலம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டது. தமிழகத்தில், நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அனைத்து கட்சிகளும் முயற்சி செய்ய வேண்டும். நாங்களும் எடுத்து வருகிறோம்.
ஆனால் திமுக ஒரே கையெழுத்தில் நீக்கி விடுவோம் என கூறினார்கள். அவர் எப்படி நீக்குவார் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். டெல்லியில் போராட்டம் நடத்தட்டும். அதனால் என்ன விளைவு வருகிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.