Edappadi Palanisamy: “சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“ - விளாசிய எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், மக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.
“பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா.?“
நன்னிலம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு உங்கள் அரசு, அது உங்கள் கட்சி, அதிமுக நன்னை செய்யும் கட்சி என்று கூறிய அவர், திமுக கொள்ளையடிக்கும் கட்சி என்று விமர்சித்தார்.
மேலும், தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப் பொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை என்றும் கூறினார். அதோடு, திருவள்ளூர் சிறுமி தூக்கிச் செலலப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், பள்ளி சிறுமியை போதை ஆசாமி தூக்கிக்கொண்டு போகிறான், குற்றவாளிக்கு அச்சம் இலலை என்று தெரிவித்தார்.
சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்றும், அப்பா என்று சொல்கிறார்(ஸ்டாலின்), பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா.? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அப்பா என்று சொன்னால் மட்டும் போதுமா.? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
“நான் பொய் செல்கிறேனா.? உண்மையை தான் பேசுகிறேன்“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார்(ஸ்டாலின்), நான் பொய் சொல்கிறேனா என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், உண்மைதான் பேசுகிறேன் என்று கூறினார்.
நாங்கள் மீண்டும் நல்லாட்சியை கொடுப்போம் என்று கூறிய இபிஎஸ், நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியின்போது கொடுத்திருப்பதாக தெரிவித்தார். நன்னிலம், குடவாசல் அரசு கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என அப்பகுதிக்கு நிறைய கொடுத்திருப்பதாகவும், ஆனால் அது எதுவும் முதலமைச்சருக்கு தெரியாது என்றும் விமர்சித்தார்.
புதிய ஊராட்சி ஒன்றிய, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரிசி ஆலை, புறவழிச் சாலை என நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள், அவற்றை அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம் என்றும் மக்களிடம் உறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி.
இறுதியாக, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கப்போவதாகவும், திமுக மிரண்டு ஓடப்போவதாகவும் கூறிய அவர், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம், பை பை ஸ்டாலின் என்று சூளுரைத்தார்.





















