மேலும் அறிய
Advertisement
'மக்களை காக்க மதுக்கடைகளை மூடுங்கள்' ராமதாசு அறிக்கை !
"குடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை: மக்களை காக்க மதுக்கடைகளை மூடுங்கள்" பாமக நிறுவனர் ராமதாசு அறிக்கை.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த மின்சார வாரியப் பணியாளர் மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டிய இளைஞர் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெறும்பூரை அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்ற இளைஞர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 32 வயதான அந்த இளைஞர் நேற்று முன்நாள் மதுவுடன் நஞ்சைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மதுவுடன் நஞ்சையும் கலந்து குடித்து விட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளையராஜாவை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை.
மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த தற்கொலைகளில் இருந்து இளையராஜாவின் தற்கொலையை வேறுபடுத்திக் காட்டுவது அவர் எழுதி வைத்துள்ள தற்கொலைக்கான காரணத்தை விளக்கும் கடிதம் தான். குடி குடியைக் கெடுக்கும் என்பதால் எவரும் மதுவுக்கு அடிமையாகி சீரழியாதீர்கள் என அதில் அவர் மன்றாடியுள்ளார்.
‘‘என் சாவிற்கு முழு காரணம் எனது குடிப்பழக்கம் தான். நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. என்னைப் போல் யாரும் குடிகாரர்கள் ஆகி விடாதீர்கள். குடி ஒருவன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆனால் என்னால் குடியை விட முடியவில்லை. கடைசியாக குடிக்கிறேன். விஷம் கலந்து குடித்தே பிரிகிறேன் உங்கள் எல்லோரையும் விட்டு’’ என்று தமது தற்கொலைக் கடிதத்தில் இளையராஜா கூறி உள்ளார். மது ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம்.
தற்கொலை செய்து கொண்ட இளையராஜா பொதுத்துறை நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் இருந்தவர். அவர் மட்டும் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து இருந்திருக்கலாம். ஆனால், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஒருபுறம் போதை அடிமை நிலையும், மறுபுறம் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும் சேர்ந்து கொண்டு இளையராஜாவை தற்கொலைக்கு தள்ளி விட்டன. மதுப்பழக்கம் மிகவும் மோசமானது என்பதை உணர்ந்து கொண்டும் அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்பதை அவரது தற்கொலை கடிதம் காட்டுகிறது. மதுப்பழக்கத்தின் மீது மோகம் கொண்டுள்ளவர்களுக்கு இளையராஜா எழுதி வைத்திருக்கும் தற்கொலைக் கடிதம் ஒரு பாடம்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதால் தான் மதுவுக்கு எதிராகவும், மதுவிலக்குக்கு ஆதரவாகவும் 40 ஆண்டுகளாக போராடியும், பரப்புரை செய்தும் வருகிறேன். மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல விதமான புற்று நோய்கள், கல்லீரல் அழற்சி, மாரடைப்பு உள்ளிட்ட 200 வகையான நோய்களுக்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டும் மனநிலையை மது போதை உருவாக்குகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களில் சுமார் 37 விழுக்காட்டினர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75% 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக மது அருந்துவதற்கான வயது 21 எனும் போது அதற்கு முன்பே 75 விழுக்காட்டினர் மதுவுக்கு அடிமை ஆகின்றனர் என்றால் தமிழ்நாட்டில் மது விற்பனை விதிகள் மதிக்கப்படவில்லை என்று தான் பொருள்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 முதல் 20 விழுக்காட்டை மதுப்பழக்கத்தால் நாம் இழக்கிறோம். இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு மது தான் காரணமாகும். பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் கைம்பெண்கள் ஆவதற்கும், குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுவதற்கும் மது தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான கொள்ளைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கும் மதுவே முதன்மைக் காரணம். இவ்வளவு சமூகத் தீமைகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணமாக மது வணிகத்தை அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காக தொடர்வது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்; இதை மன்னிக்கவே முடியாது.
தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் உடனடியாகவோ இல்லாவிட்டால் படிப்படியாகவோ, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மது போதைக்கு அடிமையானவர்களை மீட்க தமிழகம் முழுவதும் போதை மீட்பு சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion