சாலையில் போர்வெல் அமைத்து திமுக முன்னாள் கவுன்சிலர் அடாவடி - நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள்
அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் நேற்று மாலை 5:45 மணியளவில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஆழ்துளை கிணறு ஜல்லி கொட்டி மூடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 29வது வார்டில் வசிப்பவர் பாஸ்கரன். இவர் தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர், சமீபத்தில் நடந்த நகராட்சி தேர்தலில், கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதால், தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இந்த நிலையில் பாஸ்கர், தன் வீட்டிற்கு எதிரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில், நேற்று அதிகாலை, 300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன், திண்டிவனம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பாஸ்கருக்கு கமிஷனர் அனுப்பிய நோட்டீசில், சட்டத்திற்கு புறம்பாக போட்டுள்ள ஆழ்துளை கிணற்றை மூடாவிட்டால் நகராட்சி சார்பில் மூடப்பட்டு, அதற்கான செலவு தங்களிடமிருந்து வசூலிக்கப்படும். 'சட்டத்திற்கு புறம்பாக ஆழ்துளை கிணறு அமைத்ததற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 5:45 மணியளவில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஆழ்துளை கிணறு ஜல்லி கொட்டி மூடப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















