பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

பீகாரில் அடித்து ஆடும் பாஜக
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி அடித்து ஆட ஆரம்பித்தது. தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டே இருந்தது. இதனால் பாஜக தொண்டர்கள் குஷியில் கொண்டாட ஆரம்பித்தனர். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் கவலைக்கிடமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.குறைந்தது 40 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மோசமான நிலையில் காங்கிரஸ்
ஆனால் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வி அகில இந்திய காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதே நேரம் தமிழகத்தில் திமுக செம குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 முதல் 5 மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. தங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும், கூட்டணி ஆட்சி வேண்டும் என அவ்வப்போது அக்கட்சி நிர்வாகிகள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் திமுக கூட்டணியில் கூடுதல் இடம் தரவில்லையென்றால் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என மறைமுகமாக மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியானது.
தமிழகத்தில் காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு
இந்த நிலையில் பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் இடம் ஒதுக்கி தர வேண்டும் என திமுகவை மிரட்ட முடியாத நிலையானது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்தது 30 முதல் 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்து இருந்தது.
காங்கிரஸ்க்கு சிக்கல்
ஆனால் தற்போதைய பீகார் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் பீகாரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தால் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையானது ஏற்பட்டிருக்கும். எனவே இந்த தோல்வி திமுகவிற்கு ஒரு பக்கம் அதிர்ச்சியை கொடுத்தாலும் மறு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.




















