(Source: ECI/ABP News/ABP Majha)
சாம்சங் நிறுவனத்திற்கு திமுக அரசு சாதகமாக செயல்படுகிறது - எஸ்.டி.பி.ஐ
தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் திமுக அரசு - எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் , 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்கிற தென்கொரிய நிறுவனம். இந்நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
துவங்கப்பட்ட காலம் முதல் மிக நல்ல லாபத்துடன் இயங்கி வரும் இந்த நிறுவனம் மிகக் குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பலமணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் , தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு , சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது என்றும், தமிழக அரசு அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் , சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர்- 9 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். காவல் துறையின் பல்வேறு நெருக்கடிகளை கடந்து இன்னும் இந்தப் போராட்டம் வீரியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 90 சதவீத தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர், சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வந்துள்ளதாகவும், மீதமுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், அமைச்சர்களின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை திசைதிருப்பும் செயல் என சிஐடியு தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியான சாம்சங்-தொழிலாளர் சமாதான ஒப்பந்தங்கள் குறித்தான செய்திகள் உண்மையல்ல எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத பாசிசக் கொள்கைகளையே திமுக அரசு பின்பற்றுகிறது. ஒன்றிய அரசு இயற்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முன்நிற்கிறது திமுக அரசு. அதன்படி சாம்சங் நிறுவனத்திற்கு விசுவாசத்தைக் காட்டி, தொழிலாளர்களை பகடைகாயாக்குகிறது. திமுக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மக்களின் ஓட்டுகளை பெற்று அரசாங்கத்தை அமைத்த பிறகு, அந்நிய நிறுவனங்களின் நலனுக்காக சொந்த மக்களை கசக்கிப் பிழிய துணை போகிறது திமுக அரசு. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் தொழிலாளர் விரோத போக்கை கையாளும் திமுக அரசை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே, சாம்சங் நிறுவன விவகாரத்தில் தொழிலாளர்களின் அனைத்து விதமான நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு துணை நிற்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்காமல், உரிமைகள் காக்கப்பட துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளர்களின் நியாயமான இந்த கோரிக்கை போராட்டத்தை எஸ்டிபிஐ கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.