Udhayanithi: தமிழ்நாடு ஆளுநருடன்தான் 4 வருஷம் போராடிக்கிட்டு இருக்குது... துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு கடந்த 4 வருடங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் தேர்தல் மிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று மிகப்பெரிய அரசியல் போட்டி உருவாகியுள்ளது.
ஆளுநருடன் போராட்டம்:
இந்த சூழலில், திருச்சியில் இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
நாம் நம்முடைய தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துவிட்டோம். பாஜக அவர்களுடைய தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமாக ஒருவர் அவருடைய தேர்தல் பரப்புரையை இரண்டு வாரத்திற்கு முன்பாக தொடங்கியுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, நம் ஆளுநர் ஆர்.என்.ரவிதான்.
தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது என கேட்கிறார் ஆளுநர் ரவி. கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநருடன் தான் தமிழ்நாடு போராடி வருகிறது. இனியும் தொடர்ந்து போராடி வென்று காட்டும்!
— DMK IT WING (@DMKITwing) October 8, 2025
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்.#DyCMUdhay pic.twitter.com/7h9xUxRwi5
நாம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று சொன்னால், அவர் யாருடன் போராடுவீர்கள்? யாரை வெல்வீர்கள்? என்று கேட்கிறார். நான்கு வருடமாக தமிழ்நாடு உங்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக தமிழ்நாடு உங்களுடன் போராடும். உங்களுடன் வென்று காட்டும்.
அடிமை எடப்பாடி பழனிசாமி:
சட்டமன்றத்தில் எந்த கோப்பு அனுப்பினாலும் அதில் கையெழுத்து போடமாட்டேன் என்றவரிடம் சட்டப்பூர்வமாக ஒவ்வொரு முறையும் நம் தலைவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி போல அனைவரும் தனக்கு அடிமையாக இருப்பார்கள் என்று ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக என்றும் போராடிக் கொண்டிருக்கும். கருப்பு, சிவப்பு கொடி பறக்கும் வரை தமிழ்நாட்டில் பாசிச சக்திகளை நாம் என்றும் அனுமதிக்க மாட்டோம். கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை தமிழ்நாடு நிச்சயம் போராடிக்கொண்டு இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநர் - அரசு மோதல்:
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கு முன்பு இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் கருத்து மோதல் இருந்தது.
இதையடுத்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக பொறுப்பேற்றது முதலே அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஏராளமான கருத்து மோதல் நடந்து வருகிறது.
சட்டமன்றத்திலே பாதியில் இருந்து அவர் புறக்கணித்துச் சென்றதும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்ததும், தமிழக அரசின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காததும் மிகப்பெரிய மோதலை கடந்த காலத்தில் ஏற்படுத்தியது. இந்த சூழலில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் எதிரான கருத்து மோதல் மீண்டும் வெடித்துள்ளது.





















