Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டதாக, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில், நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது வாரிசு அன்புமணி இடையே பதவிச் சண்டை நடந்து வருவது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில், அன்புமணி தான் கட்சியின் தலைவர் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
“அன்புமணி தலைவர் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு செல்லாது என்பது உறுதியாகிவிட்டது“
இது குறித்து நேற்றி இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் இன்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.“ என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை(கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.“ என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
“எனவே, நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக, மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெறச் செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.“ என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.“ என்று தனது அறிக்கை மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.





















